×

ஒன்றிய பாஜ அரசை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி புறப்பட இருக்கிறது: நூல் வெளியீட்டு விழாவில் செல்வப்பெருந்தகை பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய ‘பாசிசம் வீழட்டும், இந்தியா மீளட்டும்’ என்ற தேர்தல் பிரச்சார நூல் வெளியீட்டு விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்து, தேர்தல் பிரச்சார நூலை வெளியிட்டார். அதை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து, தேனாம்பேட்டை காமராஜர் அரங்க முகப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் புகைப்பட கண்காட்சியை செல்வப்பெருந்தகை திறந்து வைத்தார். விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:

பிரதமர் மோடியின் மக்களுக்கு எதிரான அநீதிகள், அவர் செய்த ஊழல்கள், தேர்தல் பத்திர முறைகேடுகள் பற்றிய முழு விவரம் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. இன்று புனித வெள்ளி, இயேசு தன்னுடைய தேவாலயத்தில் தவறு செய்தவர்களை எல்லாம் சாட்டை எடுத்து விரட்டி அடித்தார் என்று சொல்வார்கள், தற்போது அதேபோன்று தான் இந்தியா கூட்டணி தலைவர்கள் சாட்டையை கையில் எடுத்துள்ளார்கள்.தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணி என்ற ஒரு வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கூட்டணி தான் இந்திய தேசத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது. 2019ம் ஆண்டை காட்டிலும், இந்த முறை 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

நாட்டு மக்களுக்கு எந்த விதத்தில் சோதனை வந்தாலும் அது சமூகநீதி ஆகட்டும், இயற்கை நீதியாகட்டும், முதலில் குரல் கொடுப்பது தமிழ்நாடு தான். தற்போது பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி புறப்பட இருக்கிறது என்பது இன்றைய வரலாறு. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், சென்னை மாநகராட்சி குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், டில்லி பாபு, மாநில செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, பி.வி.தமிழ்செல்வன், இலக்கிய அணி தலைவர் புத்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய பாஜ அரசை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி புறப்பட இருக்கிறது: நூல் வெளியீட்டு விழாவில் செல்வப்பெருந்தகை பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union's Bahia government ,Chennai ,State Vice President ,Tamil Nadu Congress Party ,Kopanna ,Kamarajar Stadium ,Tenampetta ,President of ,Tamil Nadu Congress ,Dinakaran ,
× RELATED பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன்...