பெரம்பலூர்,மார்ச்29: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், புனித வியாழனை முன்னிட்டு பாதங்களைக் கழுவி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்களால் அனு சரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில், இயேசுவின் கடைசி இரவு உணவு, சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்தப் புனித வாரத்தின் முதல்நாளான கடந்த 24 ம் தேதி குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று புனித வியாழனை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலியுடன், இயேசு கிறிஸ்து தன்னையே தாழ்த்திக் கொண்டு, சீடர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி பங்கு குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது. மேலும் இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் உணவருந்திய கடைசி இரவு உணவு நினைவுபடுத்தப்பட்டது.
இதன்படி பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையிலுள்ள புனித பனிமய மாதா திருத்தலத்தில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மைகுரு ராஜ மாணிக்கம் தலைமையிலும், பாளையம் கிராமத்தில் புனித யோசேப்பு தேவாலயத்தில் பங்குகுரு ஜெயராஜ் தலைமையிலும், சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம், தொண்ட மாந்துறை, நூத்தப்பூர், திருவாளந்துறை, திருமாந்துறை, வடக்கலூர், பெருமத்தூர், பாடாலூர் ஆகிய கிராமங்களிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அந்தந்த பங்கு குருக்கள் தலைமையில் புனித வியாழன் சிறப்புத் திருப்பலியுடன் நினைவு கூறப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று 29ம் தேதி இயேசுகிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த புனித வெள்ளி அனுசரிக்கப் படுவதையொட்டி நேற்றி ரவு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் தொடர் வழிபாடு நடத்தப்பட்டது.
The post புனித வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதங்களை கழுவும் சடங்கு: பங்குகுருக்கள் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.