×

செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதிகபடியாக நெல் பயிரிடப்படும் வில்லியம்பாக்கம் பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், வில்லியம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா ஏகாம்பரம் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதனை அறிந்து சுற்றுப்புற கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வில்லியம்பாக்கம், பாலூர், சாஸ்திரம் பாக்கம், கொங்கணஞ்சேரி, ஆத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்யலாம் என்று பாலாற்று படுகை விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், பாலாற்று படுகை விவசாய சங்க தலைவர் தனசேகர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : procurement ,Williampakkam ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே மின் மோட்டார் குழியில் விழுந்த பசுமாடு மீட்பு