×

அண்ணாமலை வேட்புமனுவை ஏற்க திமுக, அதிமுக, நாம் தமிழர் எதிர்ப்பு: பல்வேறு குளறுபடி இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார்

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான கிராந்திகுமார்பாடி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, திமுக, அதிமுக, நாதக மற்றும் சுயேட்சை கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பாஜ சார்பில் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனுவும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அண்ணாமலை தரப்பில் 2 வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வேட்புமனு பரிசீலிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலையின் வேட்புமனுவில் தவறு இருப்பதாகவும், அதனை ஏற்கக்கூடாது என்றும் அதிமுக, நாம் தமிழர், திமுகவினர் கூறினர். அண்ணாமலையின் வேட்புமனு படிவம்-26 தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ளதுபோல் இல்லை எனவும், ‘எக்ஸ்ட்ராக்ட்’ பகுதியில் அவருக்கு வாக்கு இருக்கும் தொகுதி மற்றும் நாடாளுமன்ற தொகுதியை பற்றி குறிப்பிடாமல் இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் மற்றும் அவரின் வக்கீல் விஜயராகன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அண்ணாமலையின் வேட்பு மனுவில் குறைகள் இருப்பதாக கூறிய அதிமுக வக்கீல்கள் தேர்தல் ஆணையம் அளித்துள்ள கையேட்டை காண்பித்து கேள்வி எழுப்பினர். அண்ணாமலை வேட்புமனுவில் தவறுகள் இருப்பதால் ஏற்கக்கூடாது என தெரிவித்தனர். கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில், கிராந்திகுமார்பாடி அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார். இதனால் திமுக, அதிமுக, நாதக கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி அதிமுக வக்கீல் கோபால் கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மக்களவை தொகுதிக்கு நீதிமன்ற பயன்பாட்டிற்கான முத்திரைத்தாளில் (Indian court Fee) பத்திரம் மூலம் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் அல்லாத முத்திரைத்தாளில் (Indian non judicial) மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற பயன்பாட்டிற்கான முத்திரைத்தாளை பயன்படுத்தி வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது.

இதனை சட்டப்படி ஏற்கக்கூடாது. இந்த முத்திரைத்தாள் பயன்படுத்தியதால் அவர் வெற்றி பெற்றாலும் அது செல்லாது. இவ்வளவு பெரிய தவறை தேர்தல் அதிகாரி கவனிக்கவில்லை. அண்ணாமலை வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அழுத்தம் கொடுத்து இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் கூறுகையில், ‘‘அண்ணாமலை வேட்புமனுவுடன் இணைத்துள்ள படிவம் 26 தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டதுபோல் இல்லை. படிவம் 26ம் பக்கம் பகுதி ஏ வரிசை எண் 5 பகுதி, பில் பக்கம் 30 ஆகியவற்றில் தவறு இருக்கிறது. இது தொடர்பாக கேள்வி எழுப்பினோம். ஆதாரத்துடன் காண்பித்தும், அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தேர்தல் விதி ஒரே மாதிரி இருக்க வேண்டும் இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றம் செல்ல உள்ளோம்’’ என்றார். திமுக வக்கீல் அன்புசெழியன் கூறும்போது, ‘‘அண்ணாமலை வேட்புமனுவில் குறைகள் இருந்தன. இதனை அனைவரும் சுட்டிக்காட்டினோம். இருந்தபோதிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தெரிவித்தார்’’ என்றார்.

6 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி எம்பி, பாஜ கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாகவும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி சந்திரபிரபா ஜெயபால் மற்றும் சுயேட்சையாக ஒ.பன்னீர்செல்வம் பெயருடைய 4 பேர், எம்.பன்னீர்செல்வம் என்ற பெயருடைய ஒருவர் உள்ளிட்ட 35 பேர், 56 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் நவாஸ்கனி, ஓபிஎஸ், ஜெயபெருமாள், சந்திரபிரபா ஜெயபால் மற்றும் சுயேட்சையாக தாக்கல் செய்யப்பட்ட ஒ.பன்னீர் செல்வம் உட்பட 5 பன்னீர்செல்வங்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 28 மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஓபிஎஸ்சுக்கு போட்டியாக பன்னீர்செல்வம் பெயரில் மனுதாக்கல் செய்த 5 பேரும் நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வரவில்லை. அவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அதில் 3 பேர் அதிமுகவினர் தங்களது கட்டுப்பாட்டில் தலைமறைவாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெறும் நாளான நாளை (மார்ச் 30) வரை இவர்கள் தலைமறைவாக வைத்து, இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெறச் செய்து ஓபிஎஸ்சுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

கலெக்டர் விளக்கம்

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான கிராந்திகுமார் பாடியிடம் கேட்ட போது, ‘அண்ணாமலை சார்பில் எண் 17 மற்றும் எண் 27 என இரண்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில், எண் 17-ல் கையெழுத்து இல்லை மற்றும் நீதிமன்ற முத்திரை தாள் பத்திரம் பயன்படுத்தியதால் நிராகரிக்கப்பட்டது. எண் 27 வேட்புமனு சரியாக இருந்ததால், அந்த வேட்புமனு ஏற்கபட்டது,’ என விளக்கம் அளித்தார்.

The post அண்ணாமலை வேட்புமனுவை ஏற்க திமுக, அதிமுக, நாம் தமிழர் எதிர்ப்பு: பல்வேறு குளறுபடி இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : DMK ,AIADMK ,Naam ,Tamils ,Annamalai ,Election Commission ,Coimbatore ,Coimbatore District Collector's Office ,Election Officer ,Collector ,Kranthikumbarpadi ,Nataka ,Naam Tamils ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...