×

ஒரு வேட்பாளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடத்தில் இருந்தால் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரிக்க முடியுமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. பெரும்பாலானவர்கள் காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்து விட்டனர். இன்னும் 568 பேர் மட்டும் ஒப்படைக்காமல் உள்ளனர். அவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருக்கலாம். வேறு ஏதாவது காரணங்களால் ஒப்படைக்க முடியாத நிலையில் இருக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை. எனவே ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகளால் பெரிய பிரச்னை எழ வாய்ப்பில்லை.

ஒரு வேட்பாளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் இருந்தால் அவரது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரிக்க முடியுமா? என்று கேட்டால், இதற்கென்று தனி விதிகள் உள்ளன. வேட்புமனுவை நிராகரிப்பதற்கான காரணங்களை தேர்தல் கமிஷன் தனியாக பட்டியலிட்டுள்ளது. அதில் நீங்கள் சொன்ன காரணம் இருந்தால், அதில் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மட்டுமே உள்ளது. அதில் தேர்தல் கமிஷன் தலையிடாது. இன்று (29ம் தேதி) புனித வெள்ளி பொது விடுமுறை. எனவே வேட்புமனுக்களை இன்று வாபஸ் பெற முடியாது. நாளை (30ம் தேதி) வரை கால அவகாசம் உள்ளது. அப்போது வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். வாபஸ் பெறுவதற்கான நேரம் (மாலை 5 மணி) முடிந்ததும், சின்னம் பெற்றிராத கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.

தங்க, வைர நகை வியாபாரிகள் என்னை சந்தித்து தேர்தல் நேரத்தில் பறக்கும் படை சோதனைகளால் ஏற்பட்டுள்ள அசவுரியங்களை தெரிவித்தனர். பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு கைப்பற்றும் நகைகள், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. உரிய ஆவணங்களை காட்டினால் உடனே திரும்பக் கிடைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டனர். தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கூறியிருக்கிறோம். 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது தேர்தல் நடத்தை விதி மீறலா என்றால் அதுபற்றி எந்த தகவலும் இல்லை. தேர்தல் கமிஷன் அனுமதியை ஒன்றிய அரசு பெற்றிருக்கலாம்.

The post ஒரு வேட்பாளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடத்தில் இருந்தால் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரிக்க முடியுமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Chennai ,Tamil Nadu ,Satyapratha Sahu ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...