×

இந்தியில் ஒட்டுவேட்டை நடத்தும் பாமக வேட்பாளர்கள்: ‘மேரா நாம் சவுமியா அன்புமணி’

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி இந்தியில் பேசி வாக்கு சேகரித்தார். தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது மேட்டூர் சட்டமன்றத்தொகுதி. இங்குள்ள காவேரிபுரம் சத்யாநகரில் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் சவுமியா அன்புமணி ‘சலாம் அலேக்கும். அலேக்கும் சலாம். மேரா நாம் சவுமியா அன்புமணி’ என்று ஆரம்பித்தவர், ‘தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் எனக்கு கட்சி பார்க்காமல் ஓட்டு போடுங்க. நான் உங்களுக்காக உழைக்க வந்திருக்கிறேன்.

உங்களுக்கான தேவைகள் என்னவென்பது எனக்கு முழுமையாக தெரியும். அதை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று இந்தியில் பேசி வாக்கு சேகரித்தார். தங்களது வேட்பாளர் திடீரென இந்தியில் பேசி வாக்கு சேகரித்தது, அங்கிருந்த ஜி.கே.மணி, எம்எல்ஏ சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியது. இதேபோல், விழுப்புரம் மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளராக தர்மபுரியை சேர்ந்த முரளிசங்கர் என்பவர் போட்டியிடுகிறார். மரக்காணம், விழுப்புரம் பகுதியில் ராமதாஸ் தலைமையில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் வேட்பாளரான முரளிசங்கர் இந்தியில் பேசி ஓட்டுகேட்டார். விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேட்பாளர் முரளிசங்கர் பேசுகையில், ‘நான் படித்த இளைஞர், இந்த தொகுதியில் உங்களுக்கு பணியாற்றுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புகொடுங்கள்.

எனக்கு 6 மொழிகளில் பேசத்தெரியும், மோடியை போல் நானும் இந்தியில் பேசுவேன்,’ என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியை புகழ்ந்து இந்தியில் பேசியும், பாரத் மாதாகி ஜே என்று கூறி முழு பாஜ கட்சிக்காரனாகவே பாமக வேட்பாளர் முரளிசங்கர் மாறிவிட்டார் என்று அக்ட்சியினரே புலம்பி வருகின்றனர். அதுவும் மேடையில் ராமதாசை வைத்துகொண்டு அவரது முன்னிலையிலேயே இந்தி மொழியில் பேசி, மோடியை புகழ்ந்து வருவது அனைவரையும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளதாம். உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி வேண்டும், கடைகளில் தமிழ் பெயரில் பலகைகளில் வைக்க வேண்டும் என்று ராமதாஸ் தமிழை முன்னிலைப்படுத்த குரல் கொடுத்து வரும் நிலையில், பாமக வேட்பாளர்கள் இந்தியில் ஓட்டு வேட்டை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post இந்தியில் ஒட்டுவேட்டை நடத்தும் பாமக வேட்பாளர்கள்: ‘மேரா நாம் சவுமியா அன்புமணி’ appeared first on Dinakaran.

Tags : BAMK ,BMC ,Soumya Anbumani ,Dharmapuri ,Mettur Assembly Constituency ,Parliamentary ,Kaveripuram Satyanagar ,BAMAK ,
× RELATED அம்மாவுக்கு வாக்கு கேட்ட அன்புமணி மகள்