- சுப்பிரமணியா சுவாமி
- தெய்வானை
- திருக்கல்யாணம் கோலகம்
- பங்கூனி விழா
- திருப்பரங்குன்றம்
- சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாணம்
- சுப்பிரமண்ய சுவாமி கோயில்
- திருப்பரங்குன்றம்
- மதுரை
- இறைவன்
- முருகன்
- சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்
திருப்பரங்குன்றம்: பங்குனி திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை தேரோட்டம் நடக்கிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் முதல் படை வீடாக அழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மார்ச் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச்சப்பரத்திலும், மாலையில் பூத வாகனம், அன்னவாகனம், தங்கமயில் வாகனம், பச்சை குதிரை வாகனம், தங்கக்குதிரை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இன்று நண்பகல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மீனாட்சி சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் கலந்து கொண்டு மதுரை திரும்பினர். திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 6 கி.மீ நீளமுள்ள கிரிவலப்பாதையில் தேர் வலம் வரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லும் வாகனங்களும், திருமங்கலத்தில் இருந்து மதுரை நகருக்குள் செல்லும் வாகனங்களும் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் வரும் கனரக வாகனங்கள் முத்துப்பட்டி அழகப்பன் நகர் வழியாக செல்ல வேண்டும்.
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திருநகர் வழியாக வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் பூங்கா நிறுத்தம் அருகில் உள்ள காலி இடத்திலும், தெப்பக்குளம் அருகில் உள்ள வாகன காப்பகத்திலும் நிறுத்த வேண்டும். அவனியாபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் சரவணப்பொய்கை வாகன காப்பகத்திலும், மதுரை நகருக்குள் இருந்து வரும் டூவீலர்கள் திருப்பரங்குன்றம் ஆர்ச் முதல் மயில் மண்டபம் வரை சாலையின் ஓரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலும், பாலத்தின் அடியிலும் நிறுத்த வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது.
The post பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்: திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பரவசம் appeared first on Dinakaran.