×

ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில் சிக்கிய நடிகையான எம்பி நவ்நீத் நள்ளிரவில் பாஜகவில் ஐக்கியம்: அமராவதி வேட்பாளராக உடனடி அறிவிப்பு

அமராவதி: ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில் சிக்கிய நடிகையான எம்பி நவ்நீத், நேற்று நள்ளிரவில் பாஜகவில் ஐக்கியமானார். அமராவதி தொகுதி வேட்பாளராக போட்டியிட உடனடியாக வாய்ப்பளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியின் சுயேச்சை எம்பியும், நடிகையுமான நவ்நீத் ராணா, பாஜக ஆதரவாக செயல்பட்டு வந்தார். இவர் தனது ஜாதி சான்றிதழை மோசடியாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்திருந்தது. மேலும் அவரது ஜாதி சான்றிதழை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நவ்நீத் ராணா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த வழக்கு இன்னும் விசாரணை நிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியின் போது, ஹனுமான் சாலிசா பாடல் பாடியதற்காக நவநீத் ராணா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது இருந்தே உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் லோக்சபா தேர்தலில் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதா அல்லது பாஜகவில் சேர்ந்து போட்டியிடுவதா? என்று நீண்ட நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று நள்ளிரவு நாக்பூர் சென்ற அவர் பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே முன்னிலையில், தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அவரது கணவரான எம்எல்ஏ ரவி ராணாவும் உடனிருந்தார். தொடர்ந்து பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பில், ‘அமராவதி தொகுதியில் பாஜக வேட்பாளராக நவ்நீத் ராணா போட்டியிடுவார். ஏப்ரல் 4ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வார்’ என்று அறிவித்தது. அப்போது நவ்நீத் ராணா கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆதரவாளராக இருந்து வருகிறேன். பாஜகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

The post ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில் சிக்கிய நடிகையான எம்பி நவ்நீத் நள்ளிரவில் பாஜகவில் ஐக்கியம்: அமராவதி வேட்பாளராக உடனடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MP Navneeth ,Unity ,BJP ,Amravati ,Navneeth ,Bajaga ,Nawneet Rana ,Maharashtra ,BJP Unity ,
× RELATED நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அன்பின்...