×
Saravana Stores

மக்களவை தேர்தல் 2024: உணர்ச்சிவசப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்… யார் இந்த திண்டுக்கல் முபாரக்?

சென்னை: முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, தனது உணர்ச்சிப்பூர்வமான உரையால் கண்கலங்க வைத்துள்ள இவரது வீடியோக்கள்தான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. வீச்சுமிகு உரைகள், மத நல்லிணக்கத்தின் அடையாளம் என சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களாக ட்ரெண்டில் இருக்கும் இந்த முபாரக் யார்? மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிதான் திண்டுக்கல்.

இங்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முகமது முபாரக். 2009ஆம் ஆண்டு முதல் நேரடியான கள அரசியல் செய்து வரும் சிறுபான்மை மக்களுக்கான அழுத்தமான போராளியாக அறியப்பட்டவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை தனது ஊரிலேயே முடித்து MS பல்கலைக்கழகத்தில் இளங்கலை தொழில் நிர்வாகப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர், முதுகலை அரசியல் அறிவியலும் படித்தார். கல்லூரி காலம் முதலே சமூகப்பணிகளில் ஈடுபாடுள்ள மாணவனாகவே இருந்துள்ளார் முபாரக்.

இந்தியாவிலேயே அதிகமான சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதியில் பிறந்து அம்மக்களின் சிக்கல்களை நேரடியாக பார்த்து வளர்ந்த முபாரக்குக்கு, சிறுபான்மை சமூக பிரச்னைகளில் மட்டுமன்றி எளிய மக்களின் உரிமை சார் பிரச்னைகளிலும் அதிக கவனம் இருந்தது. அத்துடன் சூழலியல் சார்ந்த பல்வேறு போராட்டங்களை படிக்கும் காலத்திலேயே முன்னெடுத்தார். குறிப்பாக இவர் நடத்திய ‘தாமிரபரணி நதி பாதுகாப்பு இயக்கம்’ தமிழ்நாட்டு அரசியல் பெரிதும் கவனிக்கப்பட்டது. சமூக அக்கறையுள்ள மாணவன் என்றும் இளைஞன் என்றும் அறியப்பட்டிருந்த முபாரக்கின் தலைமைத்துவத்தை தமிழ்நாடு கவனித்த நிகழ்வாக இந்த “நீர்நிலைகள் பாதுகாப்பு” திட்டம் அமைந்தது.

விளிம்புநிலை மக்களின் மீட்சி, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சி , தொழிலாளர் நலன் உள்ளிட்ட சமூகம் சார் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் குறிக்கோளுடன் அரசியல் களத்திலும் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். “கூட்டணி அமைத்திருக்கிறோம் என்பதற்காக அவர்களது திட்டங்களை எதிர்க்க மாட்டோம் என்றில்லை. கூட்டணியை விட மக்கள் நலன் முக்கியம் ” என்ற இவரது முழக்கம் பொதுவெளியில் இவரை தலைவர்கள் மத்தியில் தனித்துவமாகக் காட்டியது. 2009ஆம் ஆண்டு SDPI கட்சி தொடங்கப்பட்டபோது தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார்.

தொடர் அர்ப்பணிப்பும் தொய்விறந்த களப்பணியும் இவரை துணைத்தலைவராக்கியது. 2 ஆண்டுகாலம் துணைத்தலைவராக இருந்த இவரை, தலைவராக்கி தன் துணைக்கு வைத்துக் கொண்டது அரசியல் களம். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடும் இவரது செறிவான பேச்சுகளும் அதன் வீடியோக்களும் 2கே இளைஞர்களையும் மாணவர்களையும் அதிகம் ஈர்ப்பவையாக உள்ளன.

The post மக்களவை தேர்தல் 2024: உணர்ச்சிவசப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்… யார் இந்த திண்டுக்கல் முபாரக்? appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election 2024 ,Dindigul Sinivasan ,Dindigul Mubarak ,Chennai ,Former ,Forest Minister ,Dindigul Sinivasana ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு ஆதரவு தரவில்லை என்றால்...