சீர்காழி, மார்ச் 28:சீர்காழி பேருந்து நிலையத்தில் அகற்றப்படும் கட்டிட இடிபாடுகளை சீரமைக்காததால், பணிகளை கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்து வந்ததால் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 42 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இந்தத் திட்டத்தின் கீழ் உணவக கட்டிடம், சைக்கிள் ஸ்டாண்ட், சிமெண்ட் தரைதளம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது.
இந்த பணிகளுக்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முதல் கட்டமாக ஒரு பகுதி தரை தளம் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு தோண்டப்படும் ஜல்லிகளை சீர்காழி நகராட்சி பகுதிகளில் தாழ்வாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து ஜல்லிகளை கொட்டி சீரமைக்க வேண்டுமென கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தோண்டப்படும் ஜல்லிகளை நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் பாஸ்கரன், சுவாமிநாதன், ராஜசேகர், முபாரக் அலி உள்ளிட்டோர் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று ஜல்லிகளை தாழ்வாக உள்ள சாலைகளை சீரமைக்க கொடுக்க வேண்டும் எனக் கூறி பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
The post சீர்காழி பேருந்து நிலையத்தில் அகற்றப்படும் கட்டிட இடிபாடுகளை சீரமைக்காததால் பணி தடுத்துநிறுத்தம் appeared first on Dinakaran.