×

ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தனியார் வசமாகிறதா?: 4000 காலி இடங்கள் நிரப்பப்படவில்லை

சிறப்பு செய்தி
சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான ரயில் பெட்டிகள் தயாரிக்கும் உற்பத்தி நிலையமாகும். 1952ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலதரப்பட்ட பெட்டிகளை தயாரித்து உள்ளது. இந்திய ரயில்வேயின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் பாதுகாப்புத்துறை மற்றும் சில வெளிநாட்டு ரயில்வேகளுக்கான பெட்டிகளையும் உற்பத்தி செய்து கொடுத்துள்ளது. இந்திய ரயில்வேயின் பெருமைக்குரிய வந்தே பாரத் தொடர்களை ஐ.சி.எப் தானே வடிவமைத்து உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இதுவரை 60 வந்தே பாரத் ரயில் தொடர்களை ஐ.சி.எப் உற்பத்தி செய்துள்ளது. வந்தே பாரத் தொடர் சேவைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் உள்ள ஐ.சி.எப்பில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி மறுக்கின்றது.மேலும், வந்தே பாரத் ரயில் தொடர்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான புதிய தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் மற்றும் டெக்னீசியன் பதவிகளை உருவாக்கவும் ரயில்வே வாரியமும், ஒன்றிய நிதி அமைச்சகமும் அனுமதி மறுக்கின்றன. தற்போது மிக அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களையும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஏற்படப் போகின்ற காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கு ஐ.சி.எப்-க்கு ரயில்வே வாரியம் அனுமதி மறுக்கின்றது.

இதனால் ஏற்படுகின்ற அளவுக்கு அதிகமான தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு ஐ.சி.எப் நிர்வாகம் மிக அதிகமாக தனியார் ஒப்பந்ததாரர்களிடம் உற்பத்தி பணியை அளிக்கின்றது. வந்தே பாரத் ரயில் தொடர்களை உற்பத்தி செய்வதற்காக புதிதாக தேவைப்படும் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களின் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு ரயில்வே வாரியமும், ஒன்றிய நிதி அமைச்சகமும் அனுமதி மறுக்கின்றன.

இந்திய ரயில்வேக்கு ஐ.சி.எப் பங்களிப்பும் அதன் முக்கியத்துவமும்: 16 பெட்டிகளை கொண்ட ஒரு வந்தே பாரத் ரயில் தொடருக்கு ரூ.115 கோடி என்ற செலவில் ஐ.சி.எப் உற்பத்தி செய்கின்றது. இது போன்ற செமி ஹை ஸ்பீட் ரயில் தொடர்களை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கு இந்திய ரயில்வே முற்பட்டபோது அதற்கான விலை தோராயமாக ரூ.250 கோடியாக இருந்தது. மேலும், அம்ரித் பாரத் என்ற இரு பக்கங்களும் ரயில் இன்ஜின்களை கொண்ட புதிய ரயில் தொடரை ஐ.சி.எப் வடிவமைத்து உற்பத்தி செய்துள்ளது. அம்ரித் பாரத் ரயில் தொடர்கள் குளிர்சாதன படுக்கை வசதி பெட்டிகள், சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத பயன்களுக்கான ரயில் பெட்டிகளை கொண்டுள்ளது. இந்த ரயில் தொடர் வந்தே பாரத் ரயில் தொடருக்கு இணையான வசதிகளை கொண்டுள்ளது.

தற்பொழுது ஐ.சி.எப் ‘வந்தே மெட்ரோ’, ‘கதிசக்தி’, ‘ரேப்பிட் மெட்ரோ’ மற்றும் ‘ரீஜனல் மெட்ரோ” என்ற நான்கு புதிய வகை ரயில் தொடர்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் வேலைகளை தொடங்கி உள்ளது. இவை அனைத்தும் உலகில் உள்ள மற்ற எந்த ரயில் பெட்டி உற்பத்தியாளர்களின் விலையை விட மிக குறைந்த செலவில் ஐ.சி.எப்பில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 2024-25ம் ஆண்டுக்கான ஐசிஎப் உற்பத்தி அட்டவணை: வரும் நிதியாண்டில் ஐசிஎப் சுமார் 45 வடிவமைப்புகளை கொண்ட 3030 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய முடிவு எடுத்துள்ளது.
அதன்படி,
3030 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான மனித சக்தியும், ஐசிஎப் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படும் மிக அதிகமான தனியார் பங்களிப்பும்: 3030 ரயில் பெட்டிகளை வரும் ஆண்டில் உற்பத்தி செய்வதற்கு சுமார் 465 லட்சம் மணி நேரங்கள் மனித சக்தி (உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் டெக்னீசியன்கள் மட்டும்) தேவைப்படும். ஐ.சி.எப்பில் தற்பொழுது உள்ள நேரடி டெக்னீஷியன்கள் மூலம் 147 லட்சம் மணி நேரங்களைக் கொண்ட மனித சக்தி மட்டுமே பெற முடியும். மிக அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ள காரணத்தால். ஐ.சி.எப் நிர்வாகம் உற்பத்திக்கு தேவையான மனித சக்தியின் பெரும் பங்கை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. அதாவது சுமார் 318 லட்சம் மணி நேரங்களைக் கொண்ட மனித சக்தி தனியார் ஒப்பந்தகாரர்கள் வசம் கொடுக்கப்படுகின்றது. இது ஐ.சி.எப்புக்கு தேவைப்படும் மொத்த மனித சக்தியின் சுமார் 69% ஆகும்.

பெட்டி
வகைகள் எண்ணிக்கை
3PH EMU 480
மேமு 275
வந்தே பாரத் 644
கொல்கத்தா மெட்ரோ 152
ஸ்பார்ட் 39
எல்எச்பி 1439
மொத்தம் 3030

தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படும் ஐ.சி.எப்
 தற்போது ஐசிஎப்பில் சுமார் 2300 டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் சுமார் 2000 டெக்னீஷியன் பணியிடங்கள் வரும் இரண்டு ஆண்டுகளில் காலியாகும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஆர்.ஆர்.பி நோட்டிபிகேஷன் எண் CEN.2/2024 இல் ஐ.சி.எப்பில் உள்ள தற்போதைய காலிப் பணியிடங்களையும் இரண்டு ஆண்டுகளில் உருவாகப் போகும் காலி பணியிடங்களையும் நிரப்புவதற்காக டெக்னீஷியன்களின் எண்ணிக்கை ஐ.சி.எப்பிற்கு ஒதுக்கப்படவில்லை.
 முன்பு ஐ.சி.எப் பதிவு செய்த சுமார் 700 தொழிற்சாலை உதவியாளர்கள் காலி பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை.
 இயந்திரவியல் மற்றும் மின்னியல் பிரிவில் உள்ள தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் பணியிடங்களில் சுமார் 21% காலியாக உள்ளது. வரும் இரண்டு ஆண்டுகளில் இதற்கு இணையான காலியிடங்கள் உருவாகும்.
 மிக அதிகமாக உள்ள டெக்னீஷியன் காலிப் பணியிடங்கள், தொழிற்சாலை உதவியாளர்கள் காலி பணியிடங்கள். தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களின் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கு ஐ.சி.எப்புக்கு இந்திய ரயில்வே வாரியம் அனுமதி அளிக்காமல் வஞ்சிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ரயில் பெட்டிகளின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் வந்தே பாரத் ரயில் தொடருக்கு தேவையான ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கு இன்னும் அதிகமான மனித சக்தி தேவைப்படும். இந்த முக்கியமான தருணத்தில் எந்த காலி பணியிடங்களையும் நிரப்புவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி மறுக்கிறது. இந்தப் போக்கு ஐ.சி.எப்பை நிரந்தரமாக தனியார் வசம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் எடுத்துள்ள பல முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்ற அச்சம் அனைத்து ஐ.சி.எப் தொழிலாளர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

The post ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தனியார் வசமாகிறதா?: 4000 காலி இடங்கள் நிரப்பப்படவில்லை appeared first on Dinakaran.

Tags : Chennai ICF ,The Link Box Factory ,ICF ,Chennai ,Indian Railways ,Chennai ICF Factory ,Dinakaran ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...