×

15 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அதிமுகவினரால் தான் பல தொகுதிகளில் தோல்வி: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் முழுமையாக வாக்களிக்காததால் பல தொகுதிகளில் பாமக தோற்றதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, தி.நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார். பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் :
*அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு வலியுறுத்தப்படும்.
* அரசு பணியாளர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம்.
* அரசுத்துறை பொதுத்துறை பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த நடவடிக்கை.
* தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்த விலக்கு பெறுதல்.
* சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவித்தல். உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் பின்னர் அன்புமணி அளித்த பேட்டி: சமூக நீதிக்காகவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கமான பாமக கூட்டணிக்கு சென்று விட்டாலும் ஒருபோதும் எங்களின் கொள்கையை விட்டு கொடுக்கமாட்டோம். எங்களின் சித்தாந்தம். கொள்கையில் உறுதியாக இருப்போம். அதேபோல், தமிழ்நாட்டின் நலன் கருதியும்; நாட்டின் நலன் கருதியும் பாஜவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. எடப்பாடி சொல்வது போல நாங்கள் வேடந்தாங்கல் பறவைகள் அல்ல. பாமக ஒரு வேடந்தாங்கல் சரணாலயம்; எனவே, எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம். மேலும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு முன்கூட்டியே கொடுத்திருந்தால் நீதிமன்றத்தில் வெற்றி கிடைத்திருக்கும்.

தேர்தல் கூட்டணிக்காக கடைசி வரை இழுத்து சென்று அவசரமாக வெளியிட்டதால் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த சட்டம் குறித்து ஒருமுறையாவது எடப்பாடி எங்காவது பேசியதுண்டா? பாமகவுடன் கூட்டணி வைத்ததால் தான் 66 இடங்களில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. பாமக 15 இடங்களில் வெற்றி பெற்று இருக்கும். அதிமுகவின் வாக்குகள் பாமகவிற்கு முழுமையாக போடாத காரணத்தால் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். திருமாவளவன், சீமான் ஆகியோரை கூட்டணிக்கு இழுக்க பல முறை எடப்பாடி முயற்சி செய்தும் வராததால் பாமகவிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தார். சவுமியாவுக்கு தர்மபுரியில் சீட்டு கொடுக்க அவர் எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட போது ஆய்வு நடத்தி போராட்டம் நடத்தியவர். இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்.

The post 15 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அதிமுகவினரால் தான் பல தொகுதிகளில் தோல்வி: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BMC ,Anbumani ,CHENNAI ,Ramadoss ,T. Nagar, Chennai ,CMA… ,CMA ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...