×

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு: சென்னை, மார்த்தாண்டம் மற்றும் ராமநாதபுரம் என தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னையில் 3 இடம் மற்றும் மார்த்தாண்டம், ராமநாதபுரத்தில் ஒரு இடம் என தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் 5 செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் 1ம் தேதி குண்டு வெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. அப்போது குண்டு வெடிப்பு இடத்தின் அருகே கிடைத்த தொப்பியை வைத்து விசாரணை நடத்தியதில் கர்நாடகா மாநிலம் சிமோஹாவை சேர்ந்த முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோர் இந்த சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் அந்த இருவரின் செல்போன் தகவல்களை எடுத்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை மற்றும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் அடிக்கடி இருவருடனும் பேசியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக சென்னை முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த அபுதாஹிர் வீடு, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை அருகே புதுப்பேட்டை கார்டன் பி.வி.3 வது தெருவில் உள்ள லியாகத் அலி என்பவர் வீடு, அதேபோன்று வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அருகே காத்பாடா 9வது குறுக்கு தெருவில் வசிக்கும் அப்துல் ரஹீம் என்பவர் வீடு ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 4 மணி நேரம் நடந்த சோதனையில் 3 பேரிடம் இருந்து செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைதொடர்ந்து 3 பேருக்கும் என்ஐஏ அதிகாரிகள் நாளை பெங்களூருவில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அளித்துவிட்டு சென்றனர். இந்த சோதனையால் சிறிது நேரம் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், தென்காசி மாவட்டம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ராஜா முகமது(45) என்பவர், மார்த்தாண்டம் அடுத்த சாங்கை பகுதியில்வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரை தேடி நேற்று காலை பெங்களூருவில் இருந்து என்ஐஏ இன்ஸ்பெக்டர் பிஜூ தலைமையிலான குழுவினர் வந்தனர். அப்போது ராஜா முகமது அங்கு இல்லை. அந்த வாடகை வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2022ல் 6 மாதங்கள் மட்டுமே தங்கள் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்ததாகவும், அதன் பிறகு அவர் வீட்டை காலி செய்து சென்றுவிட்டதாகவும் கூறினார்.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் ராஜா முகமது தங்கி இருந்த வீட்டை சோதனை நடத்தினர். ராஜா முகமது குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்கும்படி உரிமையாளரிடம் கூறிவிட்டு என்ஐஏ அதிகாரிகள் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் பழைய பள்ளிவாசல் பகுதியிலுள்ள பழங்கோட்டை தெருவை சேர்ந்த மீனவர் சேக்தாவூத்(38) வீட்டில் என்ஐஏ அதிகாரிகள், நேற்று காலை 6.30 மணி முதல் 12.15 மணி வரை என 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி, செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், மாலை 3 மணிக்கு பெங்களூரு என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சேக்தாவூத்திற்கு சம்மன் வழங்கினர். பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு: சென்னை, மார்த்தாண்டம் மற்றும் ராமநாதபுரம் என தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Rameswaram cafe ,NIA ,Tamil Nadu ,Chennai ,Marthandam ,Ramanathapuram ,Bengaluru ,Rameswaram ,Dinakaran ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...