×

450 கோடி முறை பெண்கள் இலவச பஸ் பயணம்: வடக்கிற்கு வழிகாட்டும் தமிழ்நாட்டு திட்டங்கள்.! இந்தியாவுக்கே திசைகாட்டியாக மாறிய மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு இன்று பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. சில துறைகளில் இந்தியாவில் முதலிடம் பெற்ற மாநிலமாகவும் விளங்குகிறது. இதற்கு தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாக நிலவி வந்த சாதி ஆதிக்க ஏற்றத் தாழ்வுகளையும் ஆண், பெண் பாலின வேறுபாடுகளையும் அகற்றி எல்லோரும் எல்லாம் பெற வழிவகுக்கும் திராவிட மாடல் அரசின் திட்டங்களே காரணம். 2021 மே 7ம் தேதி தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் – விடியல் பயணம்-திட்டத்தைச் செயல்படுத்திட ஆணையிட்டு நடைமுறைப்படுத்தினார். அத்திட்டத்தின் மூலம், இதுவரை ஏழத்தாழ 450 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணும் மாதம்தோறும் 888 ரூபாய் சேமித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிறந்தது முதல் தந்தை கையையும், திருமணத்திற்குப் பின் கணவன் கையையும், வயதான பின் மகன் கையையும், எதிர்பார்த்துத் தான் பெண்கள் வாழ வேண்டிய நிலைமை எங்கும் உள்ளது.

இந்த நிலை மாறி சுயமரியாதையுடன் வாழ பெண்கள் கல்வி பெறவேண்டும்; வேலைக்குச் செல்ல வேண்டும்; சுயமாகத் தொழில் புரிய வேண்டும்; பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் என்ற கோட்பாடு பெரியார், அண்ணா, கலைஞரால் உருவாக்கப்பட்டது. கலைஞரின் சிந்தனைகள் வழியே மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்தியும் பின்னர் பட்டமேற்படிப்பு வரை நீட்டித்தும், சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றியும், அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடுகளை வழங்கியும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடுகள் தந்தும் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது திமுக. தொழில் மனைகளில் மகளிர்க்கு 10 சதவீத மனைகளை ஒதுக்கீடு செய்து பெண்களை தொழில் முனைவோர் ஆக்கிய பெருமையும் திமுகவுக்கே உண்டு. தர்மபுரியில் தொடங்கப்பட்ட மகளிர் திட்டம் தமிழ்நாடு முழுவதிலும் சுய உதவி குழுக்களாகப் பரிணமித்து இன்று கிராமப்புற மகளிர் இடையே பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தி மாபெரும் வெற்றியைக்கண்டுள்ளது.

50 வயது கடந்தும் திருமணமாகாத மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500 வழங்கும் திட்டத்தை 2010ல் நடைமுறைப்படுத்தி, தற்போது தொகையை ரூ.1200 என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களோடு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நாள் முழுவதும் குடும்பத்திற்காக உழைத்து வரும் மகளிர்க்கு தன்னம்பிக்கை அளித்திட உதவித் தொகையாக அல்ல; உங்களுக்கு இது உரிமைத் தொகை என்று சொல்லி 1.15 கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்றி மகளிர் பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளார். அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரியில் சேர்ந்துள்ள 4.82 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் புதுமைப்பெண் திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏறத்தாழ 3 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிலையில் அடுத்து தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் அறிவித்துள்ளார். இத்திட்டங்களின் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை தேசிய அளவில் 26 சதவிகிதம் என குறைந்திருக்க, தமிழ்நாட்டில் மட்டும் 52 சதவீதம் என உயர்ந்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டங்களால் குடும்பங்களின் பொருளாதாரச் சுமை அகற்றப்பட்டு, மாணவச் செல்வங்கள் தடையின்றி கல்வி கற்றிடும் இனிய சூழ்நிலைகள் வளர்ந்துள்ளன. இது திராவிட மாடல் அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். முதல்வர் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில், 18 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறைகளை நேரில் வந்து பார்வையிட்ட தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் இத்திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டம் எனக் கூறி பாராட்டினர். இதனால்தான் தமிழகத்தின் திராவிட மாடல் அரசு இந்தியா முழுவதும் பாராட்டப்படுகிறது. இந்திய மாநிலங்கள் எல்லாம் திராவிட மாடல் அரசின் திட்டங்களை வரவேற்றுப் பின்பற்றுகின்றன. மு.க.ஸ்டாலினின் இந்த திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்றைய நிலையில் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் முன்னேற்றத்திற்கே வழிகாட்டும் திட்டங்களாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

The post 450 கோடி முறை பெண்கள் இலவச பஸ் பயணம்: வடக்கிற்கு வழிகாட்டும் தமிழ்நாட்டு திட்டங்கள்.! இந்தியாவுக்கே திசைகாட்டியாக மாறிய மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,M.K.Stalin ,India ,Tamilnadu ,
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...