×

அண்ணாமலை போட்டியிடும் கோவைக்கு மட்டும் ஐபிஎஸ் இல்லாத எஸ்பியை நியமிப்பதா?

சென்னை: முக்கியமான தொகுதிகளுக்கு ஏடிஜிபி அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலை போட்டியிடும் கோவைக்கு மட்டும் ஐபிஎஸ் இல்லாத எஸ்பியை நியமித்துள்ளது ஏன் என்ற சந்தேகம் திடீரென எழுந்துள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்கும் ஒரு ஐபிஎஸ், ஒரு ஐஏஎஸ் மற்றும் 2 ஐஆர்எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அதில் ஐபிஎஸ் அதிகாரி சட்டம் ஒழுங்கு, வாகனச் சோதனை, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பார். ஐஏஎஸ் அதிகாரி ரோந்துப் பணிகள், தேர்தல் பணிகளை கவனிப்பார். 2 ஐஆர்எஸ் அதிகாரிகளும் தேர்தல் செலவினங்களை கவனிப்பார்கள். வேட்பாளரை கண்காணித்து வீடியோ எடுப்பார்கள். அதேபோலத்தான் தற்போது தமிழகத்தில் நடைபெறும் தேர்தலுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் வெளிமாநிலத்தில் இருந்து 4 அதிகாரிகள் வந்துள்ளனர்.

அதில் முக்கிய நகரங்களான திருச்சிக்கு ராஜஸ்தானில் இருந்து ஒரு ஏடிஜிபி, சேலத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஐஜி, மதுரைக்கு ஒரு ஐஜி, கடலூருக்கு ஒரு டிஐஜி என்று நேரடி ஐபிஎஸ் அதிகாரிகள் அதுவும் சீனியர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 3 அணிகள் மோதுகின்றன. அதில் திமுக அணி பலமாக உள்ளதாலும், மக்களிடம் ஆட்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாலும், எந்த கெட்ட பெயர் இல்லாததாலும் 39 தொகுதியிலும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின்னர் 2வது இடத்தில் அதிமுக இருப்பதாகவும், 3 வது இடத்தில்தான் பாஜக அணி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் வேலூர், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அதிமுகவுடன் 2வது இடத்துக்கு பாஜ போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக பதற்றமான தொகுதியாக கோவை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோவைக்கு ஒரு ஏடிஜிபி அதிகாரி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கோவைக்கு யாரும் எதிர்பாராத விதமாக ராஜஸ்தானைச் சேர்ந்த எஸ்பி மனோஜ்குமார் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேரடியாக ஐபிஎஸ் பணிக்கு வராதவர். தமிழகத்தில் குரூப் ஒன் தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணியில் சேருவதுபோல, இவர், ராஜஸ்தான் மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டு பதவி உயர்வு மூலம் எஸ்பியாக பணியாற்றுகிறவர். கோவை போன்ற அதிக பதற்றமான தொகுதிக்கு எஸ்பி அந்தஸ்தில் அதுவும், மாநில அரசால் தேர்வு செய்யப்பட்ட அதிகாரியை நியமித்துள்ளது ஏன் என்ற சந்தேகம் போலீசாருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், கோவையில் உள்ள அரசியல் கட்சியினருக்கும் எழுந்துள்ளது. இதனால் பல்வேறு யூகங்களுக்கும், வதந்திகளுக்கும் வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

The post அண்ணாமலை போட்டியிடும் கோவைக்கு மட்டும் ஐபிஎஸ் இல்லாத எஸ்பியை நியமிப்பதா? appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annamalai ,CHENNAI ,ATGP ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...