கோட்டா: கோட்டா பயிற்சி மையத்தில் படித்த ‘நீட்’ தேர்வு மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த 3 மாதத்தில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களில் பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அப்பகுதியில் செயல்படும் தங்கும் விடுதியில் தங்கி மாணவ, மாணவியர் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் அவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் கோட்டாவில் இருக்கும் விடுதி ஒன்றில் நீட் தேர்வுக்காக படித்து வந்த மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி சதீஷ் சவுத்ரி கூறுகையில், ‘உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உரூஜ் (20) என்ற மாணவர், கோட்டாவில் உள்ள விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்தார். அவர் நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறிப்பு கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மேற்கண்ட பயிற்சி மையங்களில் படித்த ஆறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்தாண்டு மட்டும் கோட்டாவில் போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த 26 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கோட்டா பயிற்சி மையத்தில் படித்த ‘நீட்’ தேர்வு மாணவர் விடுதியில் தற்கொலை: கடந்த 3 மாதத்தில் மட்டும் 6 பேர் மரணம் appeared first on Dinakaran.