×
Saravana Stores

வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்

*சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

தொண்டாமுத்தூர் : கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையை அடுத்த பூண்டி மலை அடிவாரத்தில் இருந்து வெள்ளிங்கிரி மலை ஏற்றம் மற்றும் கிரிவலம் சென்று 7 மலைகளைக் கடந்து சுயம்புவாக்க காட்சியளிக்கும் சிவபெருமானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூண்டி மலையடிவாரத்தில் குவிந்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாத கடைசி முதல் மே மாத இறுதிவரை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.வெள்ளிங்கிரி மலையானது சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை சுமார் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவிற்கு கடந்து சென்று 7வது மலை மீது அமைந்துள்ள சுயம்பு வடிவிலான வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு கிரிவலம் வந்து செல்கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வனத்துறை அனுமதி அளித்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து வெள்ளிங்கிரி மலையை கிரிவலம் வந்து சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். மஹா சிவராத்திரி, மாசி மாத அமாவாசை, மாசி மாத பௌர்ணமி, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, கடைசி வெள்ளி, கடைசி செவ்வாய், பிரதோஷம் என 3 மாத காலத்திற்குள் அடுத்தடுத்து வரும் விசேஷ நாட்களில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது.

கடந்த ஒரு மாத காலத்திற்குள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் சாமி தரிசனம் செய்து திரும்பி உள்ளனர். பிரதோஷம் ,சஷ்டி, அமாவாசை என ஒவ்வொரு நாளும் தன்னார்வலர்கள் கிரிவலம் வந்து செல்லும் பக்தர்களுக்கு பூண்டி மலை அடிவாரத்தில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.சென்னை, பெங்களூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர்கள் முதல் சாமானியர் வரை வார விடுமுறையான சனி ஞாயிறு போன்ற தினங்களில் வெளியூர்களில் இருந்து பேருந்துகளில் கோவை வந்து அங்கிருந்து பூண்டி மலையடிவாரத்தை அடைந்து மூங்கில் கம்பு போல் உதவியுடன் மலையேறி செல்வதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு முன் பின் அறிமுகம் இல்லாத ஆயிரக்கணக்கானோர் பூண்டி மலையடி வாரத்திற்கு வந்த பிறகு தங்களது செருப்புகளை ஆங்காங்கே கழற்றிவிட்டு மலையேறி செல்கின்றனர். கிரிவலம் வந்து முடிந்த பின்னர் தங்கள் செருப்புகளை தேடி கண்டுபிடித்து கால்களில் அணிந்து செல்வதற்கு பதிலாக ஆங்காங்கே விட்டுவிட்டு அப்படியே ஊர் திரும்புகின்றனர். இதன் காரணமாக பூண்டி மலை அடிவாரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஜோடி செருப்புகள் ஆங்காங்கே குப்பைகளாக குவிந்து கிடக்கின்றன.

இதேபோல் அன்னதானம் வழங்குவோர் இடமிருந்து பெறப்படும் பாக்குமரத் தட்டுகளையும் பிளாஸ்டிக் டம்ளர்களையும் பக்தர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் ஆங்காங்கே வீசி செல்வதால் மக்கும் குப்பை மக்காத குப்பை என மலையடிவாரம் முழுவதும் குப்பைமயமாக காட்சியளிக்கிறது.இந்தக் உணவு குப்பைகளை உண்பதற்காக காட்டுப்பன்றிகளின் கூட்டம் ஆங்காங்கே முகாமிட்டுள்ளது. இவ்வாறு காட்டுப்பன்றிகள் கூட்டம் இரைதேடி பூண்டி மலையடிவாரத்தில் வந்து முகாமிடுவது பக்தர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும். மேலும் பக்தர்கள் வீசிவிட்டுச் செல்லும் பிளாஸ்டிக் டம்ளர் பாட்டில் உள்ளிட்டவை வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வனவிலங்கு ஆர்வலர்களும் பூண்டி மலையடி வாரத்தில் மலை போல் தேங்கி வரும் குப்பைகளை அகற்ற கோயில் நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வனத்துறையினர் கல்லூரி தன்னார்வலர்கள் உதவியுடன் மலையடிவாரத்தில் குவிந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளையும், செருப்புகளையும் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள் appeared first on Dinakaran.

Tags : Vellingiri Hill ,Thondamuthur ,Velliangiri hill ,Coimbatore ,Poondi Hill ,Krivalam… ,Dinakaran ,
× RELATED சூறைக்காற்றில் கண்ணாடி உடைந்தது:...