×

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு

ஊட்டி : நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளம் வாக்காளர்களிடையே தாவரவியல் பூங்காவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடக்கும் வாக்குப்பதிவு நாளன்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று ஊட்டி அரசு தாவரவியல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலெக்டர் அருணா தலைமை வகித்து, இந்திய குடிமக்களாகிய நாம், இந்திய ஜனநாயகத்தின்மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளைக் காத்திடும் பொருட்டு சுதந்திரமான, நியாயமான, தேர்தலுக்கு ஒத்துழைக்க வேண்டும். தேர்தலில் எவ்வித அச்சமும் இன்றி சாதி, மதம், இனம் போன்ற வேற்றுமைகளை பாராமல் எந்தவித தூண்டுதலுக்கும் ஆட்படாமல் தன்னிச்சையாக மனசாட்சியின்படி வாக்களிப்போம் என்றும், நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க நியாயமாகவும், நேர்மையாகவும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி வாக்களித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு எய்திடவும் ஒத்துழைப்போம் என்றார்.

இதில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பயிலும் 100 மாணவ, மாணவியர், 30 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் ‘ஓட்டு போடுங்கள்” ‘ஓட்டுக்கு நோட்டு வாங்காதீர்கள்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் அருணா தலைமையில் வண்ணபலூன்கள் வானில் பறக்க விட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன்பின், நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து நேரில் தெரிவித்து, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி அன்று தவறாமல் தங்களது வாக்குகளை பதிவு செய்திட வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷோபனா, உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, குமாரவேல், அருண், முத்து, ஜெகதீசன், ஊட்டி தாசில்தார் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Botanical Garden ,Election Commission of India ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...