×

கொள்ளிடம், சீர்காழி பகுதியில் 3 மாதத்தில் ₹169.97 கோடிக்கு நெல் கொள்முதல்

*விவசாயிகள் மகிழ்ச்சி

கொள்ளிடம் : கொள்ளிடம், சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்தது. 3 மாதத்தில் 73,500 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு ரூ.169 கோடியே 97 லட்சத்து 85 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி பகுதியில் 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. விவசாயிகள் சம்பா தாளடி பயிர் செய்த நெல்லை அறுவடைக்கு பின்பு அந்தந்த பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த வருடம் விவசாயிகள் எதிர்பார்த்தது போல் அறுவடை ஆரம்பித்த துவக்க நிலையில் தமிழ்நாடு நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அந்தந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. நெல் மூட்டைகளை விவசாயிகளிடமிருந்து எந்த தடையும் இன்றி எளிதில் கொள்முதல் செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை விரும்பும் போதெல்லாம் வாகனங்கள் மூலம் எடுத்து வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வந்தனர்.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 35 ஆயிரம் முதல் 40,000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டன. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாதிரவேளூரில் உள்ள கொள்முதல் நிலையத்தில் மட்டும் மற்ற கொள்முதல் நிலையங்களை காட்டிலும் 40 ஆயிரம் மூட்டைக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டன. நெற்பயிர் கடந்த பருவ மழையின் போது சற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டாலும், வேளாண்துறை அவ்வப்போது விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி பாதிக்கப்பட்ட நெற்பயிர் மீண்டும் செழிப்பாக வளரும் நிலைக்கு உதவி செய்ததை அடுத்து விவசாயிகள் தீவிரமாக சம்பா நெற்பயிரை சாகுபடி செய்தனர்.

இதனால் விவசாயிகள் சம்பா நெற்பயிர் அறுவடை நஷ்டம் இன்றி செய்ய முடிந்தது. விவசாயிகள் எதிர்பார்த்தது போல் அறுவடையில் நெல் மூட்டைகள் கிடைத்தன. இதனால் கடந்த வருடங்களுக்கு இணையாக இந்த வருடமும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். சென்ற வருடத்தை விட இந்த வருடம் நெல் மூட்டையின் விலை உயர்த்தப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல் மூட்டைகளை விற்பனை செய்தனர். இந்நிலையில் விவசாயிகள் விரும்பியபடி நேற்று வரை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.

கொள்ளிடம் பகுதியில் கடைசி அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு நேற்று நிறைவடைந்தது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களில் சம்பா நெல் 73,500 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.169 கோடியே 97 லட்சத்து 85 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எருக்கூர் மற்றும் மணல்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள நவீன நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

கொள்ளிடம் அருகே உள்ள எடமணல் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அமைந்துள்ள எருக்கூர் நவீன அரிசி ஆலைக்கு சொந்தமான நவீன நெல் சேமிப்பு கிடங்கிலும் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டன. இதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்த அளவு எண்ணிக்கையிலான நெல் முட்டைகள் இருப்பு உள்ளன. இந்த நெல் மூட்டைகளும் எடுத்துச் செல்லும் பணி நேற்று நடைபெற்றது. கொள்ளிடம் பகுதியில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடமிருந்து எந்த தடையும் இன்றி விவசாயிகள் எதிர்பார்த்தது போல் கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post கொள்ளிடம், சீர்காழி பகுதியில் 3 மாதத்தில் ₹169.97 கோடிக்கு நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Kollidam, Sirkazhi ,Kollidam ,Dinakaran ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி