×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க 50 தண்ணீர் தொட்டிகள் அமைப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க 50 தண்ணீர் தொட்டிகள் புதியதாக அமைக்கப்பட்டு, அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரபரப்பளவு 5,143 சதுர கி.மீ ஆகும். இதில் ஓசூர் வனக்கோட்டமானது 1,492 சதுர கி.மீ (29 சதவீதம்) பரப்பளவுடன் மாவட்டம் முழுவதும் பரவி உள்ளது.

இங்கு உள்ள அதிக அளவிலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வன உயிரினங்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, அவைகளை பாதுகாக்கும் பொருட்டு 2014ம் ஆண்டு காவேரி வடக்கு வன உயிரின சரணாலயமும், 2022ம் ஆண்டு காவேரி தெற்கு வன உயிரின சரணாலயமும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. வனப்பகுதிக்குள் அவ்வப்போது ஏற்படும் வறட்சியின் காரணமாகவும், உணவு, குடிநீர் போன்றவற்றிற்காகவும், யானைகள், புள்ளி மான்கள், மயில்கள், பாம்புகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் காப்புக்காடுகளில் இருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிக்குள் வரும்போது மனித மற்றும் வன உயிரின மோதல்கள் நிகழ்கின்றன.

மேலும், ஓசூர் வனக்கோட்டத்திற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவேரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் சுமார் 125 முதல் 150 எண்ணிக்கையிலான யானைகள் கூட்டம் கூட்டமாக தளி, ஜவளகிரி காப்புக்காடுகளில் நுழைந்து, தேன்கனிக்கோட்டை, நொகனூர், ஊடேதுர்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகாராஜகடை காப்புக்காடுகள் வழியாக ஆந்திர மாநிலம் கவுன்டயன்யா சரணாலயம் மற்றும் வெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று, மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இவ்வாறு வரும் யானை கூட்டங்கள், ஓசூர் வனக்கோட்டத்தில், காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள விவசாய பயிர்களை உண்டும், சேதப்படுத்தியும் மனித, கால்நடை உயிரிழப்புகள் மற்றம் பொருட் சேதங்களை ஏற்படுத்தியும் வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இழப்பீடு தொகை வழங்கும் பொருட்டு, பயிர் சேதங்கள் ஏற்படும் விவசாய நிலங்களை வனப்பணியாளர்கள் உடனுக்குடன் தணிக்கை செய்து, அதற்கான இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டும், தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யானைகள் காப்புக்காடுகளை விட்டு வெளியேறி சேதங்கள் ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகிளன் எல்லையோரம் யானை தாண்டா அகழிகள் வெட்டப்பட்டும், சூரிய மின்வேலி அமைத்தும், நவீன வகையிலான தடுப்பு நடவடிக்கைகளான இரும்பு வட கம்பிவேலி (இந்தியாவில் முன்னோடியாக இங்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது) மற்றும் தொங்கும் வகையிலான சூரிய மின்வேலி அமைத்தல், யானைகளுக்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்தி தருதல், வனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அந்திய களைச்செடிகளை அகற்றி, அப்பகுதியில் யானைகள் மற்றும் இதர வன உயிரினங்கள் விரும்பும் தீவன பயிர்கள் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள 7 வனச்சரத்தில் தற்போது 50க்கும் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு, அதில் டிராக்டர் மூலம் தண்ணீர் எடுத்து சென்று நிரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக சில பகுதியில் தன்னார்வலர்களை கொண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. விரும்பம் உள்ள தன்னார்வலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வனச்சரக அலுவலர்களை தொடர்பு கொண்டு, வன உயிரினங்களுக்கு தண்ணீர் வழங்கலாம் என வனத்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க 50 தண்ணீர் தொட்டிகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri district ,Krishnagiri ,Hosur forest area ,Dinakaran ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...