×

ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு புதிய தண்டவாளத்தில் அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம்

*130 கி.மீ. வேகத்தில் பயணித்தது

நாகர்கோவில் : நாகர்கோவில் சந்திப்பு ஆரல்வாய்மொழி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில், அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நேற்று மாலை நடந்தது.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே வழித்தடம் அதிக வருவாய் வரும், தினசரி அதிகம் மக்கள் பயணிக்கும் தடமாகும். கன்னியாகுமரியில் தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது.

இந்த வழித்தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் சென்று வருகின்றன. தற்போது சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கி.மீ. பாதை இரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக மதுரை- நாகர்கோவில் வரை உள்ள பாதையை இரு வழிப்பாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி-திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும் செயல்படுத்த முடிவு செய்து பணிகள் தொடங்கின.

இந்த திட்டத்தில் ரயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மணியாச்சி-திருநெல்வேலி – நாகர்கோவில் இடையிலான 102 கி.மீ. தூர திட்ட பணிகள் மிக வேகமாக நடந்தன. நாகர்கோவில் -திருநெல்வேலி ரயில் பாதையில், ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம் பகுதிகளில் மட்டும் பணிகள் பாக்கி இருந்தன. இதில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் இடையே சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன.

சிக்னல்கள், மின் இணைப்பு கேபிள்கள் பதிக்கும் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே மேலப்பாளையம் முதல் திருநெல்வேலி வரையிலான இரட்டை ரயில் பாதைக்கான புதிய தண்டவாளத்தில் பணிகள் நிறைவு பெற்று கடந்த சில நாட்கள் முன்பு பயன்பாட்டுக்கு வந்தது.

நாகர்கோவில்- ஆரல்வாய்மொழி இடையே மட்டும் இறுதி கட்ட பணிகள் நடந்து வந்தன. குறிப்பாக கூடுதல் தண்டவாளத்தில் மின் இணைப்புகள் மற்றும் இன்டர்லாக் பணிகள் நடந்து வந்தன. இதே போல் கன்னியாகுமரி – நாகர்கோவில் டவுன் இடையிலான பகுதியிலும் இரட்டை ரயில் பாதைக்காக தண்டவாளங்கள் பதிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றன.

இதையடுத்து நேற்று அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதற்காக நேற்று காலை 8 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்திரி, திருவனந்தபுரம் டி.ஆர்.எம் மணீஷ் தப்லீயல் மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகள், ஆர்.வி.என்.எல் அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கான சிறப்பு ரயில் மூலம் வந்தனர். பின்னர் கார்களில் ஆரல்வாய்மொழி சென்றனர்.

காலை 8 மணிக்கு டிராலிகளில், அதிகாரிகள் குழுவினர் புதியதாக அமைக்கப்பட்ட ரயில்வே இருப்பு பாதை, பாலங்கள், வளைவு பகுதிகளில் ஆய்வை தொடங்கினர். மாலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வை நிறைவு செய்தனர். இதனையடுத்து, 3 குளிர் சாதன பெட்டி உள்பட 3 பெட்டிகளுடன், சிறப்பு சோதனை ஓட்ட அதிவிரைவு ரயில் சோதனை நடைபெற்றது. இதில் மணிக்கு 120 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

வளைவுகள், ரயில்வே யார்டு பகுதிகளில், ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது. மாலை 5.38 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் 2வது நடைமேடையில் சோதனை ஓட்ட ரயில் வந்து சேர்ந்தது. இன்று கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. காலையில் ஆய்வு பணிகளும், மாலையில் அதி விரைவு ரயில் சோதனை ஓட்டமும் நடைபெறும்.

நடைமேடை திடீர் மாற்றம்: மக்கள் அவதிநாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக பயணிகளை ஏற்றி செல்லும். சோதனை ஓட்டத்திற்காக வந்த ரயில்வே உயர் அதிகாரிகளின் சிறப்பு ரயில், ஆரல்வாய்மொழி செல்ல வசதியாக முதலாவது நடைமேடையில் நின்றது. ஆனால், அதிகாரிகள், காரில் ஆரல்வாய்மொழி செல்ல முடிவு செய்ததால், முதலாவது நடைமேடையின் மேற்கு பகுதியில் உள்ள டப்ளிங் லைனில் சிறப்பு ரயிலை நிறுத்த அதிகாரிகள் கூறினர். பின்னர், சிறப்பு ரயிலை முதலாவது நடை மேடையிலேயே நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதன் காரணமாக கன்னியாகுமரி ரயில் 3வது நடைமேடைக்கு திடீரென மாற்றப்பட்டது. இதனால், கன்னியாகுமரி எக்ஸ்பிரசிற்கு வந்த பயணிகள் தகவல் தெரியாமல் முதலாவது நடைமேடையில் நின்றனர். பின்னர், மைக்கில் அறிவிப்பு வந்ததை அடுத்து, 3வது நடைமேடைக்கு ஓட்டமும், நடையுமாக தங்கள் பொருட்களுடன் சென்றனர். முதியவர்கள், பெண்கள் அங்கிருந்த பேட்டரி காரில் பயணித்தனர். ஆனால், ஒரே சமயத்தில் அதிகம் பேர் வந்ததால், பேட்டரி காரில் அனைவரும் பயணிக்க இயலவில்லை. மேலும் பலர், கடைசி நேரத்தில் வந்து பதற்றத்துடன், ரயிலை பிடிக்க ஓடினர். இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

* நேற்றைய ஆய்விற்கு ஏ பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள் வந்திருந்ததால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கோச்சுகளும், ஒவ்வொரு கோச்சிலும் ஏசி வசதி, சமையல் அறை, வைபை வசதியுடன் அலுவலக அறை, சமையல் கலைஞர்கள் என ஒரு முகாம் அலுவலகம் போன்று வசதி செய்யப்பட்டிருந்தது.

The post ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு புதிய தண்டவாளத்தில் அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Aralwaimozhi ,Nagercoil ,Nagercoil Junction ,Aralvaimozhi ,Kanyakumari ,Chennai ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு