×

ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ் மீட்டிங் தனியார் ரிசார்ட்டில் கிப்ட் பாக்ஸ்கள் பறிமுதல்

ஈரோடு : நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று காலையில், ஈரோடு, வில்லரசம்பட்டி நால் ரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பாரம் ஏற்றி வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து சோதனையிட்டனர். அதில், கிப்ட் பாக்ஸ்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு எடுத்துச் செல்வதாக ஆட்டோ ஓட்டுனர் தெரிவித்துள்ளார். இதன் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் அந்த ரிசார்ட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அங்கு தனியார் நிறுவனத்தின் பிசினெஸ் மீட்டிங் நடக்க இருப்பதும், இதற்காக கிப்ட் பாக்ஸ்கள் எடுத்துவந்ததும் தெரிய வந்தது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மீட்டிங் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? என பறக்கும் படையினர் விசாரித்ததில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் அனுமதி எதுவும் பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோவில் எடுத்து வரப்பட்ட 45 கிப்ட் பாக்ஸ்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஈரோடு ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த கிப்ட் பாக்ஸில் ஒன்றை திறந்து பார்த்தபோது, அதில் பாத்திரங்கள் இருப்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கிப்ட் பாக்ஸ்களின் மதிப்பு ரூ.36,700 ஆகும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தனியார் திருமண மண்டபத்தினர் தங்கள் மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் உரிய அனுமதி பெற்ற பின்னரே நடத்திட அனுமதிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலருமான சாந்தகுமார் தலைமையில், மண்டப உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விதிமுறைகளை மண்டப உரிமையாளர்களும், நிகழ்ச்சி நடத்துபவர்களும் முறையாக பின்பற்றிட வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ் மீட்டிங் தனியார் ரிசார்ட்டில் கிப்ட் பாக்ஸ்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Erode ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...