×

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை

 

அரியலூர், மார்ச் 27: அரியலூர் மாவட்டம் சிறுவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயி. அதே கிராமத்தில் இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் இரண்டு பேருக்கும் அடிக்கடி வயல் வரப்பு தகராறு ஏற்படுவது வழக்கம்.

கடந்த 2021ல் கோவிந்தன் மனைவி சின்னபொண்ணு, சாமிநாதன் மனைவியிடம் வீண் தகராறு செய்து அவரது மகளையும் அசிங்கமாக திட்டியுள்ளார். இது குறித்து சாமிநாதன் மகள் அவரது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாமிநாதன் கோவிந்தன் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டுள்ளார். அப்போது கோவிந்தனும், அவரது மகன் தர்மராஜூம் சேர்ந்து அவரை கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சாமிநாதன் அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பான வழக்கு அரியலூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தந்தை, மகன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதனையடுத்து தந்தை, மகன் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Saminathan ,Siruvalur ,Ariyalur district ,Govindan ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...