சிவகங்கை, மார்ச் 27: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.19ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனுத்தாக்கல் மார்ச்.20ல் தொடங்கியது. சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட கடந்த 24ம் தேதி வரை ஒரு வேட்பாளர் கூட வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. மார்ச் 25 அன்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம், அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ், பிஜேபி கூட்டணி வேட்பாளர் தேவநாதன் மற்றும் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் உட்பட 8 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் எழிலரசி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷாஅஜித்திடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக இந்துஜா வேட்புமனுத்தாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர்களாக பழனியப்பன், கலைச்செல்வன், செல்வராஜ் ஆகிய 3 பேர் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 13 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
முக்கிய அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைகிறது. இன்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு பரிசீலனை நாளை நடக்கிறது. மார்ச் 30ம் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும். ஏப்.19ல் மக்களவை தேர்தலும், ஜூன் 4 ஓட்டு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.
The post நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் appeared first on Dinakaran.