×

விளாத்திகுளம் வட்டாரத்தில் நவீன ரோவர் கருவி மூலம் கோயில் நிலங்கள் அளவீடு

விளாத்திகுளம், மார்ச் 27: விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் இந்து சமய அறநிலைத் துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 2143 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதையடுத்து இந்நிலங்களை முறைப்படி கண்டறிந்து எல்லை கற்கள் நடும்பணியை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையரின் உத்தரவின் பெயரில் தனி தாசில்தார் நம்பிராயர், விளாத்திகுளம் சரக ஆய்வாளர் முருகன், நில அளவையர்கள் வினோத் குமார், அஜித் குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் விளாத்திகுளம் வட்டாரத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு விளாத்திகுளம் வட்டாரத்தில் இதுவரை சுமார் 1200 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இவ்வாறு அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

The post விளாத்திகுளம் வட்டாரத்தில் நவீன ரோவர் கருவி மூலம் கோயில் நிலங்கள் அளவீடு appeared first on Dinakaran.

Tags : Vlathikulam ,Hindu Religious Charities Department ,Thoothukudi district ,
× RELATED அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் மூன்றாம்...