×

மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா ஆதரவால் தேசபாதுகாப்புக்கு ஆபத்து: காங்கிரஸ் கடும் சாடல்

புதுடெல்லி: மோடியின் சீன ஆதரவு கருத்துகளால் தேச பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலபிரதேசத்தை தெற்கு திபெத் என சொந்தம் கொண்டாடும் சீனா, அருணாச்சலபிரதேசத்தை ஷாங்னான் என்று பெயரிட்டு அழைத்து வருகிறது. இதை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக இந்திய தலைவர்கள் அருணாச்சலபிரதேசத்துக்கு செல்வதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கடந்த 9ம் தேதி அருணாச்சலபிரதேசம் சென்ற பிரதமர் மோடி, அங்கு 13,000 அடிநீளத்தில் கட்டப்பட்டுள்ள சே-லா சுரங்கப்பாதைைய திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாங் சியோவாங், “ஜிஜாங்கின்(திபெத்) தெற்குப்பகுதிதான் அருணாச்சலபிரதேசம். இது சீனாவின் உள்ளார்த்த பகுதி. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு, இந்த பகுதியை அருணாச்சலபிரதேசம் என இந்தியா அழைப்பதை ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டோம்” என தெரிவித்திருந்தார்.

அருணாச்சலபிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அது இந்தியாவுக்கே சொந்தம்” என கூறியுள்ளது. “அருணாச்சலபிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடுவது அபத்தமானது, கேலிக்குரியது” என ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சீன வௌியுறவு அமைச்சகம் “அருணாச்சலபிரதேசம் என்றழைக்கப்படும் ஷாங்னான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி” என்று தெரிவித்தது.

சீனாவின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் டிவிட்டர் பதிவில், “அருணாச்சலபிரதேசம் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாத பகுதி. அருணாச்சலபிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடும் சீனாவின் எந்தவொரு யோசனையையும் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் ஒரேமாதத்தில் 4ம் முறையாக சீன அதிகாரிகள் நகைப்புக்குரிய, கேலிக்கூத்தான கூற்றுகளை தெரிவித்துள்ளனர்.

பிற நாடுகளை சேர்ந்த இடங்களின் பெயர்களை மாற்றுவது, வரைபடங்களில் அந்த இடங்களை மறுவடிவமைப்பதில் சீனாவின் சாதனை நன்கு அறியப்பட்டதே. அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். இருப்பினும் பிரதமர் மோடியின் சீனா ஆதரவு பேச்சுகளும், கோபமாக எதிர்வினை ஆற்றாத செயலும்தான், அருணாச்சலபிரதேச எல்லையில் வீடுகளை கட்டுவது அல்லது எல்லைக்கு அருகே வசிக்கும் மக்களை கடத்துவது போன்றவற்றுக்கு காரணம்.

மோடி அரசின் சீன கொள்கைகளால் தேச பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடியின் சீன உத்தரவாதங்களே அருணாச்சலபிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாட காரணம். இந்திய எல்லையில் அமைதி நிலவ காங்கிரஸ் விரும்புகிறது. சீனாவின் பேச்சுகளுக்கு மோடி நிச்சயம் வலுவான மறுப்பு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா ஆதரவால் தேசபாதுகாப்புக்கு ஆபத்து: காங்கிரஸ் கடும் சாடல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,China ,New Delhi ,Arunachal ,Pradesh ,India ,Southern Tibet ,Arunachal Pradesh ,Shangnan ,
× RELATED சொல்லிட்டாங்க…