×

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட் கேட்டு சென்றபோது பைக் விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாப பலி: வண்டியை ஓட்டிச் சென்றவர் படுகாயம்

புழல்: சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட் கேட்டு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக பலியானார். இதில் பைக்கை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்தார். சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி கலைவாணர் நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன். கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தங்கம் (44). இவர் நேற்று மாலையில் சோழவரம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்ல பாடி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, பாடி வன்னியர் தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன் (40) என்பவரிடம் லிப்ட் கேட்டு அவரது பைக்கில் சிறுவாபுரி கோயிலுக்குச் சென்றுள்ளார். சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுச் சாலை மேம்பாலத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பைக் மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் தங்கத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கமலக்கண்ணன் படுகாயம் அடைந்தார்.

விபத்தைக் கண்ட பொதுமக்கள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த கமலக்கண்ணனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த தங்கத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட் கேட்டு சென்றபோது பைக் விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாப பலி: வண்டியை ஓட்டிச் சென்றவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Murugan Temple ,Siruapuri ,Padukayam ,Worm ,Siruapuri Murugan Temple ,Chennai ,Badi Kalaivanar Nagar Vinayagar Temple Street ,Siruvapuri Murugan Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...