சென்னை: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்ப சொத்து மதிப்பு ரூ. 21 கோடி எனவும், தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை எனவும் வேட்பு மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளார். தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பாஜ வேட்பாளர் தமிழிசைநேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ. 1.57 கோடி என்றும் சொந்தமாக கார் கூட இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தலா ரூ.10 லட்சம் மதிப்புள்ள பரிசோதனை இயந்திரம், ஸ்கேன் இயந்திரம் உள்ளதாகவும், கணவர் பெயரில் ரூ. 3.92 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும் மகள் பெயரில் ஒரு கோடியில் அசையும் சொத்து உள்ளதாகவும் 4 கார்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழிசை பெயரில் ரூ.60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் அவரது கணவர் பெயரில் 13.70 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், மகள் பெயரில் ரூ.70 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக தமிழிசை மற்றும் குடும்பத்தினர் அசையும் மற்றும் அசையா சொத்து, வங்கி இருப்பு உட்பட மதிப்பு ரூ.21 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழிசை பெயரில் ரூ.58 லட்சமும், அவரது கணவர் பெயரில் ரூ.3.35 கோடி ரூபாயும், மகள் பெயரில் ரூ.3.41 கோடி ரூபாயும் கடன் உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜ தலைவராகவும் தமிழிசை இருந்துள்ளார். அவருக்கு 2019ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அதன்பின் கூடுதலாக புதுச்சேரியிலும் ஆளுநராக பணிபுரிந்து வந்தார். 2 மாநிலத்தின் ஆளுநராக இருந்தவருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்று குறிப்பிட்டிருப்பது ஏற்ககூடியதாக இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
The post சொந்தமாக கார் கூட இல்லையாம் தமிழிசை குடும்ப சொத்து ரூ.21 கோடி appeared first on Dinakaran.