×

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது: இந்திய தேர்தல் ஆணையம் பாராட்டு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம் -ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் பாராட்டியுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். சென்னையில் தூர்தர்ஷன் தமிழ் சென்னை மண்டல செய்தி பிரிவு நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கலந்துகொண்டு பேசியதாவது: அமைதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் காலகட்டங்களில் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுவதற்காக தேர்தல் ஆணையத்தின் பாராட்டுகளை பெற்றிருக்கிறோம். தேர்தல் கமிஷனின் நம்பிக்கைக்கு ஏற்ப சிறப்பான சட்டம்- ஒழுங்கு பராமரிப்பை மீண்டும் மீண்டும் மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அரசியலில் எவ்வளவு பெரிய பிரச்னைகள் இருந்தாலும்கூட, சட்டம் -ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதற்காக அது தொடர்புடையை ஒவ்வொரு அதிகாரிகளையும் பாராட்டுகிறேன்.

செய்திகள் வேகமாக பரவுவதற்கு சமூக வலைதளங்கள் காரணமாக உள்ளன. ஆனால் அவை பொறுப்புடன் செயல்படுகின்றனவா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. பல செய்திகள், சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வரை கவனிக்கப்படாமலேயே பரவிக் கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உள்ளிட்டவை குறித்து மக்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர். தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையானவை என்பதை தேர்தல் கமிஷன் சுட்டிக்காட்டி வருகிறது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றிய மக்களின் சந்தேகங்கள் தீர்வதற்கான நடவடிக்கைகளை வழக்குகள் மூலம் நீதிமன்றங்களும் மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் 73 முதல் 74 சதவீதம் மக்கள் வாக்களிப்பது பாராட்டுக்கு உரியது. அதன் தேசிய அளவு 67 சதவீதம்தான். நாம் சிறப்பாக செயல்படுகிறோம் என்பதைவிட இன்னும் சிறப்பாக செயல்பட அர்ப்பணிக்க வேண்டும். நகர்ப்புற பகுதியில் உள்ள வாக்காளர்கள், கஷ்டங்கள், சிக்கல்கள் இருந்தாலும்கூட தவறாமல் ஓட்டு போடுங்கள். ஊரக பகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின்றன.

பெரிய நகரங்களில் குறைவாக உள்ளது. ஓட்டு போடுவதற்கு நமக்கு எவ்வளவோ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் இளைஞர்களின் பெயர் பதிவு சற்று குறைவாக உள்ளது. நீங்கள் வேலைக்கு, படிப்புக்கு எங்கு சென்றாலும், நீங்களே பெயர் பதிவு செய்துகொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வர வேண்டும். தமிழகத்தில் 4 லட்சம் அரசு ஊழியர்களும், 3 லட்சம் போலீசாரும் தேர்தல் பணிகளை சுமுகமாக மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள். தேர்தல் பணிகள் மிகக் கடுமையானவை. அவர்கள் மிகச் சிரமத்துடன் பாடுபட்டு தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க உழைக்கிறார்கள். அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது: இந்திய தேர்தல் ஆணையம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission of India ,CHENNAI ,Chief Electoral Officer ,Election Commission ,Doordarshan Tamil ,
× RELATED மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி...