×

பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து இருந்தாலும் விற்பனை ‘டல்’தான்: வியாபாரிகள், விவசாயிகள் வேதனை

வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகமாக இருந்தாலும் விற்பனை ‘டல்’ அடிப்பதாகவும், இதற்கு தேவையற்ற தேர்தல் நடைமுறைகளே காரணம் என்றும் விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை தெரிவித்தனர். தமிழகத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைகளில் வடமாவட்டங்களில் பிரபலமானது வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் இச்சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக உள்ளூர் நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

சாதாரணமாக இங்கு ஒரு நல்ல கறவை மாடு என்பது ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சத்துக்கு மேல் வரை அதன் தரத்துக்கும், கறவை திறனுக்கும் ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்தான் காளைகள், உழவு மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ₹70 லட்சம் முதல் ₹2 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும்.

இந்த நிலையில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமையே பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை டல்லடித்தது. காரணம், ₹50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்வதாக இருந்தால் அதற்கு உரிய ஆவணம் இருக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதியில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு கறவை மாட்டுக்கே ₹50 ஆயிரம் தேவைப்படும் நிலையில், விவரம் அறியா கிராமப்புற விவசாயிகளும், கால்நடை வர்த்தகர்களும் ரொக்கப்பணத்தை கொண்டு வரும்போது நிலை கண்காணிப்புக்குழு, பறக்கும் படை அலுவலர்களால் பிடிக்கப்படுகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாட்டுச்சந்தைக்கு வந்த ஒரு விவசாயி கால்நடைகளை வாங்க ₹2 லட்சத்துடன் வந்து நிலை கண்காணிப்புக்குழுவிடம் சிக்கினார். அவரிடம் ஆவணம் இல்லை என்று கூறி அப்பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபோன்று பலரும் சிக்கினர். அதனால் இந்த வாரமும் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் அதிகம் விற்பனைக்காக வந்திருந்தாலும், வியாபாரம் என்பது ₹30 லட்சம் கூட தாண்டவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பொய்கை மாட்டுச்சந்தைக்கு வந்திருந்த விவசாயிகளும், வியாபாரிகளும் கூறும்போது, ‘விவசாயிகள் என்பவர்கள் உரம் உட்பட இடுபொருட்கள் என எதை வாங்கினாலும் மூட்டை கணக்கில் வாங்க வேண்டும். அதுவே சாதாரணமாக ₹50 ஆயிரத்தை தாண்டும். அதேபோல் ஒரு கறவை மாடு வாங்கினாலும் கணிசமான பணத்தை கையில் கொண்டு வர வேண்டும். அதற்கான ஆவணங்களுக்கு நாங்கள் எங்கே போவது? இதுபோன்ற நிலைகளை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் அதற்கான மாற்று வழிகளை தெரிவிக்க வேண்டும். பணத்துடன் வரும் விவசாயிகள், வியாபாரிகளை பார்த்தாலே, அவர்களிடம் விசாரித்தாலே, அவர்கள் எதற்காக வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பது தெரிந்து விடும். சுற்றி சுற்றி எங்களை மட்டுமே வலம் வரும் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்புக்குழுவினர் பணத்துடன் மாற்றுவழிகளில் செல்லும் அரசியல் கட்சியினரை கவனிக்க வேண்டும்’ என்று வேதனை தெரிவித்தனர்.

The post பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து இருந்தாலும் விற்பனை ‘டல்’தான்: வியாபாரிகள், விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...