×

தமிழகத்தில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்: தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது. நேற்று அவர்கள் தங்கள் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

தென்சென்னை பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் மற்றும் மகளின் சொத்து மதிப்பு விவரங்கள்:
கையிருப்பு ரூ.50,000, வங்கியின் இருப்பு ரூ.21 கோடி, ரூ.60 லட்சம் மதிப்புள்ள 3 சொகுசு கார்கள், ஒரு டெம்போ வாகனம், ரூ.96 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.20 லட்சம் மருத்துவ லேப், ஸ்ேகனிங் மிஷின், ரூ.5.50 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.14.70 கோடி அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.43 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

தென்சென்னை அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயவர்தன், அவரது மனைவியின் சொத்து மதிப்பு விவரங்கள்:
ரூ.2 லட்சம் கையிருப்பு, ரூ.20.10 லட்சம் வங்கி இருப்பு மற்றும் முதலீடுகள், ரூ.63.72 லட்சம் மதிப்பில் நகைகள், ரூ.86.82 லட்சம் அசையும் சொத்துகள், ரூ.9 கோடி சொத்துகள் என மொத்தம் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. மேலும் ஒரு வங்கி கணக்கில் மட்டும் வெறும் ரூ.83 மட்டும் உள்ளது. அதைப்போன்று அவரது மனைவி வங்கி கணக்கில் ரூ.8 மட்டுமே உள்ளது. ஒரு கிரிமினல் வழக்குகள் உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர், அவரது மனைவி சரஸ்வதி, மகன் ராஜ்கிரண் சொத்து மதிப்பு விவரங்கள்:
ரூ.14 லட்சம் கையிருப்பு, ரூ.1.52 கோடி வங்கி இருப்பு மற்றும் முதலீடுகள், ரூ.2 கோடி மதிப்பிலான 5 சொகுசுகள் கார்கள், ரூ.24 லட்சம் மதிப்பில் லாரி, ரூ.18 லட்சம் மதிப்பில் ஜேசிபி வாகனம், ரூ.28 லட்சம் மதிப்பில் தங்க நகைகள், ரூ.39.49 கோடி அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.42 கோடி சொத்துக்கள் உள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார்.

வேட்பு மனுவில் உள்ள விவரங்களின்படி,
ஆற்றல் அசோக்குமாருக்கு மொத்தம் ரூ.583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளும், அவரது மனைவியின் பெயரில் ரூ.69 கோடியே 98 லட்சத்து 78 ஆயிரம் அசையும், அசையா சொத்துகளும் உள்ளன.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் ராதிகாவின் சொத்து விவரம் வருமாறு: இதன்படி ராதிகாவிடம் ரொக்கம் ரூ.33,01,635, வங்கிகளில் வைப்பு நிதி ரூ.19,79,330, பரஸ்பர நிதி, பத்திரங்கள், பங்குகள் ரூ.11,89,12,131, தேசிய சேமிப்பு திட்டம், எல்ஐசி பாலிசி பிரிமியம் ரூ.76,67,497, ரேடன் நிறுவனப் பங்குகள், முதலீடு ரூ.13,02,89,572, ஆடி கார் ரூ.59,81,342, தங்கம் 750 கிராம், வெள்ளி 5 கிலோ மதிப்பு ரூ.24,02,505, மொத்த மதிப்பு ரூ.27,05,34,012. அசையா சொத்து மதிப்பு ரூ.26,40,00,000. கடன் ரூ.14,79,56,253. அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து பாக்கி நிலுவைத்தொகை ரூ.6,51,41,426. கணவர் சரத்குமார் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.8,32,57,684, அசையா சொத்து மதிப்பு ரூ.21,50,00,000. கடன் ரூ.19,04,11,911. அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து பாக்கி தொகை ரூ.8,48,47,735 என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான விஜயபிரபாகரனின் சொத்து மதிப்பு ரூ.17.95 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விஜயபிரபாகரனிடம் ரொக்கம் ரூ.2,50,000, அசையும் சொத்து மதிப்பு ரூ.11,38,04,371.54, அசையா சொத்து மதிப்பு ரூ.6,57,55,000. கடன் ரூ.12,80,78,587. தாயார் பிரேமலதாவிடம் ரொக்கம் ரூ.3,85000, அசையும் சொத்து ரூ.6,49,84,383.53, அசையா சொத்து ரூ.48,99,00,000, கடன் ரூ.5,50,00,000 என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் ரொக்கமாக ரூ.12 லட்சத்து 43 ஆயிரமும், அவரது மனைவியிடம் ரொக்கமாக ரூ.9.50 லட்சமும் உள்ளது. மேலும் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.12 கோடியே 61 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.1.91 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 240 பவுன் தங்க நகைகள் ரூ.1 கோடியே 15 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் உள்ளன. அவருக்கு ரூ.2.61 கோடி கடன் உள்ளது. ஒரு அம்பாசிடர் கார்கள், இரண்டு இன்னோவா கார்கள், ஒரு விவசாய டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. அவரது மனைவி சந்திரா நயினார் நாகேந்திரனுக்கு ரூ.12.03 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.5.98 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. மனைவியிடம் 560 பவுன் தங்க நகைகள் ரூ.2 கோடியே 68 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் உள்ளன. அவருக்கு ரூ.2.52 கோடி மதிப்பில் கடன் உள்ளது. நயினார் நாகேந்திரன் பெயரில் ்ரூ.ஒரு கோடியே 2 லட்சத்து 50 ஆயிரத்து 96 மதிப்பில் 29 ஏக்கர் 30 சென்ட் விவசாய நிலங்கள், வீடுகள், வணிக வளாகங்களும், அவரது மனைவி பெயரில் ரூ.25 லட்சத்து 61 ஆயிரத்து 200 மதிப்பில் 10 ஏக்கர் 31 சென்ட் நிலங்களும் உள்ளன.

பாஜ கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதியியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வேட்புமனு தாக்கலின்போது தனது சொத்து பட்டியலை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 84 ஆயிரத்து 968ம், மனைவி பிரிசில்லா பாண்டியன் பெயரில் ரூ.3 கோடியே 10 லட்சத்து 7 ஆயிரத்து 34ம் வங்கிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளது. தனது பெயரில் ரூ.4 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரத்து 367 மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளது. மனைவி பிரிசில்லா பாண்டியன் பெயரில் ரூ.2 கோடியே 70 லட்சத்து 88 ஆயிரத்து 68 அசையா சொத்துக்களும் உள்ளது. தனது பெயரில் ரூ.2 கோடியே 5 லட்சமும், மனைவி பெயரில் ரூ.93 லட்சத்து 75 ஆயிரம் கடன்கள் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனுவில் தனது கைவசம் ரூ.55 ஆயிரம் இருப்பதாக கூறியுள்ளவர், தனக்கு அசையும் சொத்துக்கள் ரூ.64 லட்சத்து 3 ஆயிரத்து 778 இருப்பதாக தெரிவித்துள்ளார். அசையா சொத்துகளாக பரம்பரை சொத்து ரூ.6 கோடி 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.7 கோடி 63 லட்சத்து 43 ஆயிரத்து 933 ஆகும்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் பசிலியான் நசரேத் தனது சொத்து மதிப்பு ரூ.9 கோடி 21 லட்சத்து 83 ஆயிரத்து 31 என்று குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் தன்னிடம் அசையும் சொத்துகள் ரூ.2 கோடி 41 லட்சத்து 20 ஆயிரத்து 999 மதிப்பில் இருப்பதாகவும், தனது கணவர் பெயரில் ரூ.1 கோடி 14 லட்சத்து 23 ஆயிரத்து 854 மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தர்மபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் சொத்து மதிப்பு ₹60.23 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தின் சொத்து மதிப்பு ₹17.32 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலு, அவரது மனைவிகளின் சொத்து மதிப்பின் விவரங்கள்:
ரூ.1.60 லட்சம் கையிருப்பு, ரூ.3.63 கோடி வங்கி இருப்பு மற்றும் முதலீடுகள், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான டிராக்டெர், ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.48 கோடி மதிப்பிலான அசையா ெசாத்துக்கள் என மொத்தம் ரூ.52 கோடி சொத்துக்கள் உள்ளது.

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் சொத்து மதிப்பு ரூ.35.54 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இதன்படி, நாராயணசாமி பெயரில், ரூ.4 கோடியே 96 லட்சத்து 71 ஆயிரத்து 801 மதிப்பில் அசையும் சொத்துக்கள், ரூ.21 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 950 மதிப்பில் அசையா சொத்துக்கள், கடன் ரூ.1 கோடியே 29 லட்சத்து 82 ஆயிரத்து 296 இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவி ராணி பெயரில், ரூ.81 லட்சத்து 1 ஆயிரத்து 704 மதிப்பில் அசையும் சொத்துக்கள், ரூ.3 கோடியே 87 லட்சத்து 88 ஆயிரத்து 650 மதிப்பில் அசையா சொத்துக்கள், கடனாக ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் வேட்புமனுவில் குடும்பத்தினர் பெயர்களில் அசையும் சொத்தாக ரூ.2,18,94,789, அசையா சொத்துக்கள் ரூ.33,71,89,498 என மொத்தம் ரூ.35,90,84,287 உள்ளதாகவும், மேலும் ஒரு கார் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு கடன் ரூ.1,35,65,000 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2.07 கிலோ தங்க நகைகள், 6.38 வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் உள்பட ரூ.1.35 கோடி நகை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழகத்தில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்: தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chennai ,Lok Sabha ,Tamilyasai Choundararajan ,Tensenna ,BJP ,Dinakaran ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...