×

திட்டங்களை சொதப்பி விட்டு சமூக வலைதளத்தில் பில்டப் காட்டும் பாஜ: கோவை மக்கள் கொந்தளிப்பு அண்ணாமலைக்கு இருக்கிறது ஆப்பு

கோவை: ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை நிறுத்தியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி மூலம் சமூக வலைத்தளத்தில் பாஜவினர் பில்டப் செய்து வருவதற்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம் என கோவை மக்கள் கொந்தளிப்புடன் கூறினர். கோவை மாவட்டத்தில் ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை நிறுத்தியதால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் (100 நாள் வேலை) 13 லட்சம் பேர் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தினமும் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட அளவில் ஒதுக்கீடு வெகு குறைவாகவே ஒன்றிய அரசு வழங்கியது. ஆண்டிற்கான பட்ஜெட் தொகையும் முறையாக வழங்கவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாததால் 100 நாள் வேலை தொழிலாளர்கள் கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட வேறு பணிகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தினமும் வழங்கப்பட வேண்டிய வேலை வாய்ப்பை ஒன்றிய அரசு 70 சதவீதம் வரை குறைத்துவிட்டதால் கிராம பகுதி ஏழை தொழிலாளர்கள் அதிருப்தியடைந்தனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் வேலை வாய்ப்பு குறைக்கப்பட்டது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மக்களை மோடி அரசு காப்பதாக பொய்யாக புகழ் பேசி வருவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

பாரத பிரமதர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் (பிஎம்ஏஓய்) பெண் பயனாளிகள் தங்கள் பெயரில் உள்ள நிலத்தில் வீடு கட்டினால் மானியம் 2.67 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பயனாளிகள் ஒன்றிய அரசின் மானியத்தை நம்பி வீடு கட்டினர். சிலர் வங்கி கடன் பெற்றும் வீடு கட்டினார். கொரோனா நோய் பரவல் காலத்தில் அதிக பயனாளிகளுக்கு மானியம் தருவதாக ஆசை காட்டிய ஒன்றிய அரசு கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது.

மாவட்ட அளவில் சுமார் 26 ஆயிரம் பயனாளிகள் 50 சதவீத மானியம் கூட பெற முடியாமல் தவிக்கின்றனர். வங்கி கடனில் கழிப்பதாக கூறி ஒன்றிய அரசு பெண் பயனாளிகளை ஏமாற்றி எதுவும் தெரியாதது போல் நாடகமாடி வருவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் ஜனன சுரக்‌ஷா திட்டத்தில் வழங்கப்படும் உதவிகளையும் ஒன்றிய அரசு முறையாக செயல்படுத்தவில்லை. ரேஷன் கடைகளில் கெரசின் சப்ளை, கோதுமை சப்ளையை ஏறக்குறைய முடங்கிவிட்டது. ஒன்றிய அரசு, தாராளமாக இந்த பொருட்களை உணவு கழகத்தின் மூலமாக சப்ளை செய்வோம் என உறுதி கூறி தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

மோடி அரசின் உணவு தானிய சப்ளை நிறுத்தம் தொடர்பாக பாஜவினர் எந்த பதிலும் கூறாமல் வீதி வீதியாக மக்களுக்கு நல்லது செய்தது பாஜ அரசு தான் என ஓட்டு கேட்பதால் மக்கள் கோபமடைந்துள்ளனர். ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆதார் கார்டுகளை தபால் அலுவலகங்களில் பிழை திருத்தம் செய்யும் திட்டங்களிலும் குழப்பம் நீடிக்கிறது. கிராம பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சேவை பரிதாப நிலையில் இருக்கிறது. பல திட்டங்களை நிறுத்தி சொதப்பி விட்டு கோவை மாவட்டத்தில் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதள டிரண்டிங்கில் குரூப்களை பில்டப் செய்து ஓட்டு கேட்டு வரும் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தக்க பதிலடி வழங்க, அண்ணாமலைக்கு ஆப்பு வைக்க கோவை மக்கள் தயாராகி வருகின்றனர்.

The post திட்டங்களை சொதப்பி விட்டு சமூக வலைதளத்தில் பில்டப் காட்டும் பாஜ: கோவை மக்கள் கொந்தளிப்பு அண்ணாமலைக்கு இருக்கிறது ஆப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,Annamalai ,Union Government ,president ,WhatsApp University ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...