*முன்னோடி விவசாயிகள் வழிகாட்டல்
தோகைமலை : கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் அவரை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.அவரை சாகுபடி செய்ய ஆடி, ஆவணி மாதங்கள் ஏற்ற பருவமாகும். மேலும் மலை பகுதியில் அவரை சாகுபடி செய்வதற்கு சித்திரை மாதம் சிறந்ததாகும். அதேநேரம் செடி அவரையை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
அவரை பட்டை அவரை, கோழி அவரை, பட்டை சிகப்பு, நெட்டு சிகப்பு, குட்டை அவரை என பல ரகங்கள் உள்ளது. இதில் பந்தல் முறையில் அவரை சாகுபடி செய்தால் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதையும், செடி அவரை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையும் தேவைப்படும். விதைகளை நடுவதற்கு முன்பு ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி 100 கிராம், சூடோமோனஸ் புளுரசன்ஸ் 100 கிராம் போன்றவற்றை ஆறிய அரிசி வடி கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் 24 மணி நேரத்திற்குள் நடவு செய்ய வேண்டும்.
அவரை சாகுபடியில் ஈடுபடும் போது மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனையால் தேவைக்கு அதிகமான உரமிடுவதை தவிர்ப்பதோடு, செலவுகளை குறைக்கலாம். எனவே உழவு பணிகளை செய்வதற்கு முன் மண் பரிசோதனை செய்வது அவசியம். தொடர்ந்து வயலை பொழபொழப்பாக நன்றாக உழவு செய்ய வேண்டும்.செடி அவரை சாகுபடிக்கு பாத்தி முறையை பின்பற்ற வேண்டும். கடைசி உழவின் போது 5 டன் தொழு உரம் இட வேண்டும்.
அவரை சாகுபடியில் 4 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பருவ சூழ்நிலை மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர் பாய்ச்சுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் காய் அறுவடைக்கு முதல் நாள் தண்ணீர் பாய்ச்சிய பின் காய்களை அறுவடை செய்ய வேண்டும். காய் அறுவடை செய்த பின்பு மறுநாளும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லை என்றால் செடிகள் வாடும். பூ பூக்கும் போதும், காய்க்கும் போதும் செடிகளின் வளர்ச்சி பருவங்களுக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
அவரை சாகுபடியில் அசுவினி தாக்கம் இருந்தால் தாக்கப்பட்ட இலையின் மேல் எறும்புகளும், இலையின் உள் பகுதி மடங்கியும் இருக்கும். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு ,மிடாகுளோர் 1 மில்லி அல்லது அசிபேட் 2 கிராம், நிம்பிசிடின் 3 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது வெர்டிசீலியம் மற்றும் பிவேரியா என்னும் பூஞ்சானத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
காய்ப்புழுவை உருவாக்கும் தாய் அந்துப் பூச்சியானது முட்டைகளை பூவிலிடுவதால் காய்ப்புழு உருவாகிறது. இதனால் காய்ப்புழு தாக்கத்தின் போது பூ மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்து விடுகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு 4 சிசி டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை கட்டி கட்டுப்படுத்தலாம். மேலும் செடி அவரைக்கு காய்ப்புழுவிற்கான இனக்கவர்ச்சிப் பொறி ஒரு ஏக்கருக்கு 6 அடத்தில் பயிக்கு ஒரு அடிக்கு மேல் இருக்குமாறு வைத்து ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கொடி அவரைக்கு பந்தலில் கட்டி வைத்து கலந்து தெளிக்க வேண்டும்.
ரசாயன முறையில் கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டருக்கு 4 மில்லி மருந்துடன் டைக்குளோராவாஸ் 1 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். ஆகவே மேற்படி முறைகளை பின்பற்றி அவரை சாகுபடியை செய்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று விவசாயிகள் லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.
The post அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை appeared first on Dinakaran.