*ஆர்.பி.எப்., தனிப்படை போலீசார் நடவடிக்கை
சேலம் : கோடை விடுமுறையை குறிவைத்து ரயில் டிக்கெட்டுகளை முறைகேடாக எடுத்து விற்கும் நபர்களை ஆர்பிஎப் தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் தொடங்க உள்ளதால், நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கிராமங்களுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் முக்கிய வழித்தடங்கயில் இயங்கும் ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ள நிலையில், கோடை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தும் வருகிறது.
இந்நிலையில், பயணிகளின் தேவையை அறிந்து முறைகேடாக ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்கும் சம்பவங்கள் சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து நடக்கிறது. ஐஆர்சிடிசி மூலம் முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் வெவ்வேறு பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டு, அதனை விற்கும் செயலில் சில கணினி மைய ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இவர்களிடம் அவசரத்திற்கு டிக்கெட் வாங்கி பயணிக்கும் நபர்கள் இருக்கின்றனர்.
இதனால், முக்கிய நகரங்களில் முறைகேடான டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஆர்பிஎப் போலீசில் கோட்டம் வாரியாக தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட பாதுகாப்பு படையினர் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மேட்டுப்பாளையம், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஐஆர்சிடிசியில், அதிக கணக்குகளை வைத்துக்கொண்டு அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கணினி மையங்களில் சோதனை நடத்தி, முறைகேடு டிக்கெட் புக்கிங் பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி ஆர்பிஎப் போலீசார் கூறுகையில், ‘‘ரயில்வே முன்பதிவு மையங்கள் அல்லது ஆன்லைனில் முறையாக டிக்கெட் புக்கிங் செய்து பயணிக்கும் நபர்களுக்கு மத்தியில், சிலர் போலி டிக்கெட்டில் (வெவ்வேறு பெயரில்) பயணிக்கின்றனர். அவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடிக்கும்போது தான், முறைகேடு தெரியவருகிறது. அத்தகைய பயணிகளிடம் விசாரித்தால், அதிக பணம் கொடுத்து தனியார் கணினி மையங்களில் வாங்கியதாக தெரிவிக்கின்றனர்.
அத்தகைய மையங்களையும், மாதந்தோறும் ஆன்லைனில் அதிக டிக்கெட் புக்கிங் செய்யும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். முறைகேடு டிக்கெட் புக்கிங்கால், பலரும் பயணம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அதனால், பொதுமக்களும், நேரடியாக ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பயணிக்க கேட்டுக் கொள்கிறோம்,’’
என்றனர்.
The post கோடை விடுமுறையை குறிவைத்து ரயில் டிக்கெட்டுகளை முறைகேடாக எடுத்து விற்கும் நபர்கள் கண்காணிப்பு appeared first on Dinakaran.