×

ஊட்டிக்கு வந்த வடமாநில சுற்றுலா பயணிகளிடம் ரூ.60 ஆயிரம் பறிமுதல்

*பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை : மேற்கு வங்காளம் கொல்கத்தா பகுதியை சேர்ந்தவர் மனுதீப் கோஷ் (45). வங்கி ஊழியர். இவரின் மனைவி தேவ ஸ்ரீகோஸ். இவரது குழந்தை மற்றும் தேவ ஸ்ரீகோசின் தந்தை, தாய் என மொத்தம் 5 பேர் கொல்கத்தாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 22-ம் தேதி கொல்கத்தாவில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு நேற்று வந்தடைந்தனர். பின்னர், தனியார் கார் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி சென்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் ரூ.60 ஆயிரம் ரொக்கம் பணமாக இருந்துள்ளது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறி அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தொகையை கலெக்டர் அலுவலகத்தில் வாங்கி கொள்ள கூறியுள்ளனர். அப்போது, அதிகாரிகளிடம் தேவ ஸ்ரீகோஸ் தாங்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்ததாகவும், இதய நோய் மற்றும் கேன்சர் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் உடன் இருப்பதாகவும், சுற்றுலாவுக்காக பணம் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். இருப்பினும், பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் திரும்ப ஒப்படைக்க முடியாது என கூறியுள்ளனர்.

மேலும், உரிய ஆவணங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளிக்க அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் முறையிட்டனர். சுமார், 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் பணத்தை திரும்ப கொடுப்பதாக தெரிவித்தனர். இது குறித்து வடமாநில தம்பதியினர் கூறுகையில், ‘‘நாங்கள் கொல்கத்தாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலாவுக்கு வந்தோம்.

ஊட்டியில் தங்கி சுற்றி பார்த்துவிட்டு, கர்நாடகாவிற்கு சென்று அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து, பின்னர் கொல்கத்தாவிற்கு திரும்பி செல்ல திட்டமிட்டு இருந்தோம். இந்நிலையில், நாங்கள் மேட்டுப்பாளையம் வந்து அங்கிருந்து ஊட்டிக்கு காரில் சென்றபோது போலீசார் எங்கள் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டு எங்களிடம் இருந்த ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணம் எங்களின் சுற்றுலா மற்றும் மருத்துவ செலவு, உணவு, விடுதி செலவுக்காக வைத்திருந்தோம். எங்கள் பணத்தை திரும்ப பெற வேண்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வந்து உள்ளோம்.

பணத்தை திருப்பி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். பணத்தை திரும்ப அளிக்கும் ஒப்புதலை 4 மணி நேர காத்திருப்புக்கு பிறகு தருகின்றனர். இதனை எடுத்து மேட்டுப்பாளையம் சென்று அங்கு சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற வேண்டும். தேர்தல் விதிகள் காரணத்தை கூறி சுற்றுலாவுக்கு வந்த எங்களை அலைக்கழிப்பு செய்துள்ளனர். எங்களுக்கு மொழி பிரச்னை இருப்பதால் எங்கள் தரப்பு விளக்கத்தை கூற முடியவில்லை. இந்த நடவடிக்கையால் எங்களின் சுற்றுலா பயணம் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். சுற்றுலா பயணிகளிடம் இது போன்ற நடவடிக்கைகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஊட்டிக்கு வந்த வடமாநில சுற்றுலா பயணிகளிடம் ரூ.60 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : North State ,Ooty ,Flying Force Officers ,Coimbatore ,Manudeep Ghosh ,Kolkata, West Bengal ,Deva Srikose ,Northern State ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...