×

நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை வலங்கைமான் பகுதிகளில் களை இழந்த மீன் திருவிழா

வலங்கைமான் : நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் வலங்கைமான் பகுதியில் நேற்று நடைபெற்ற மீன் திருவிழாவில் குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வந்தது.
வலங்கைமான் தாலுகாவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலைத்துறைக்கு சொந்தமான குளங்கள் கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவை நீங்கலாக பல்வேறு காலகட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் நூறு சதவீத மானியத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்திடவும் மீன் வளர்ப்பு செய்து வருவாய் ஈட்டிடும் வகையில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் கெளுத்தி, ரோகு, கட்லா, சில்வர் கெண்டை, புல் கெண்டை, விரால், மிர்கால் ஆகிய இரகங்கள்அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காவிரி நீர் வரத்து குறைவு, போதிய பருவ மழை இல்லாதது போன்றவற்றால் இப்பகுதி நீர்நிலைகள் நிரம்ப வில்லை. இதன் காரணமாக வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் வளர்ப்பு பாதிப்படைந்தது.

இந்நிலையில் வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் பாடை காவடி திருவிழாவிற்கு மறுநாள் மீன் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து பிடித்து வரப்பட்ட வளர்ப்பு மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்பவர். மீன் திருவிழா அன்று மட்டும் பல டன் மீன் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் கோயில் பாடை காவடி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற மீன் திருவிழாவில் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரவில்லை. மாறாக சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏரி மீன்கள் கொண்டுவரப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பாததால் வளர்ப்பு மீன் வருகை குறைந்தது. இதன் காரணமாக நேற்று நடைபெற்ற மீன் திருவிழாவில் கெண்டை மீன் ரூ.200 முதல் 240 வரை விற்பனையானது. விரால் மீன் கிலோ ரூ.600முதல் 750 வரை விற்பனை செய்யப்பட்டது.

The post நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை வலங்கைமான் பகுதிகளில் களை இழந்த மீன் திருவிழா appeared first on Dinakaran.

Tags : fish festival ,Walangaiman ,Valangaiman taluk ,Valangaiman ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...