×

நீடாமங்கலம் பகுதியில் கோடை நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் மும்முரம்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் பகுதியில் மேற்கு வங்க தொழிலாளர்கள் கோடை நெல் நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் பகுதியில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி சுமார் 43 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சுமார் 16,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நிலத்தடி நீர் மூலம் மின் மோட்டாரை பயன் படுத்தி கோடை சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். இதில் தற்போது இப்பகுதியில் கோடை நெல் நடவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் நாற்று பறித்து அவர்களே நடவு பணியை மேற் கொண்டு வருகின்றனர். இவர்கள் ஏக்கருக்கு ரூ.4,500 மற்றும் 5 கிலோ அரிசி கூலியாக பெறுகின்றனர். மேலும் இவர்கள் நடவு நடைபெறும் இடத்திலேயே தங்கி தடவு பணியை செய்து வருவதால் கூலி ஆட்களை தேடி வேண்டிய அவசியம் விவசாயிகளுக்கு இல்லை. மேலும் இவர்களுக்கான கூலியும் சற்று குறைவு என்பதால் வைத்து நடவு விவசாயிகளுக்கு ஓரளவு பணம் மிச்சமாகிறது.

உள்ளூர் தொழிலாளர்கள் நடவு பணி செய்தால் காலையில் நாற்று பறிக்க செல்லும் போது இட்லி, டீ , 11 மணியளவில் டீ, வடை, மதிய சாப்பாடு தர வேண்டும். மேலும் மாலை வேலை முடித்து செல்லும் போது ஆண்களை தனியாக கவனிக்க வேண்டியதிருக்கிறது. மேற்கு வங்க தொழிலாளர்களால் செலவு குறைவதால் விவசாயிகள் அவர்களை நாடுவது அதிகரித்துள்ளது.
தற்போது இந்த தொழிலாளர்கள் நீடாமங்கலம், சித்தமல்லி, ராயபுரம், பரப்பனாமேடு, கடம்பூர், பூவனூர், மேலபூவனூர், காளாச்சேரி, ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நாற்றுகள் பறித்து நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நீடாமங்கலம் பகுதியில் கோடை நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : North ,State ,Needamangalam ,West Bengal ,Thiruvarur district ,Dinakaran ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...