×

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்

*திருச்செந்தூர் பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேச்சு

திருச்செந்தூர் : தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, இந்த நாடு தலைநிமிர எல்லா மக்களும் ஒன்றுபட்டு, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று திருச்செந்தூரில் பிரசாரத்தை தொடங்கிய கனிமொழி எம்பி பேசினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி எம்பி மீண்டும் போட்டியிடுகிறார். அவர், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று மாலை பிரசாரத்தை தொடங்கினார். அப்போது திறந்த வேனில் கனிமொழி எம்பி பேசியதாவது: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக்காக அல்ல.

இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வதைப் போல 2வது சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நமது அடையாளங்களை, மொழியை, தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஒன்றியத்தில் இருக்கும் பாஜ அரசு, நாட்டில் இருக்கும் மாநிலங்களின் உரிமைகளை எல்லாம் பறிக்கிறது. தொடர்ந்து ஏதோ இந்து மதத்தை இவர்கள் தான் காப்பாற்றுவது போல பேசுகிறார்கள்.

இவர்களிடம் இருந்து இந்து மக்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. ஏனென்றால் மதத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வந்து ஆட்சிப்பொறுப்புக்கு வந்து, எந்த மக்களால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார்களோ அந்த மக்களை எதிர்த்து வேலை செய்வதுதான் மோடி அரசு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அடித்தட்டு மக்கள், உழைக்கக்கூடிய மக்கள், வியாபாரிகள், யாரையாவது பாஜ வாழ வைத்துள்ளதா? என்றால் இல்லை. விவசாயிகளுக்கு எதிரான சட்டம், தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம், அதேபோல ஜிஎஸ்டி சட்டம் கொண்டு வந்து வியாபாரிகளை எல்லாம் நசுக்கிப் பிழிந்து, அபராதம் விதித்து தொழிலே செய்ய முடியாத அளவுக்கு சித்ரவதை செய்து கொண்டிருக்கக் கூடியது தான் பாஜ என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எத்தனையோ புதிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்காக கொண்டு வரப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படுகிறது. பெண்கள் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பயண வசதி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, இந்த நாடு தலைநிமிர எல்லா மக்களும் ஒன்றுபட்டு, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாடும் நமதாக வேண்டும், நாற்பதும் நமதாக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீண்ட நாளாக பொன்னன்குறிச்சியில் இருந்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து கொண்டு இருக்கிறீர்கள்.

விரைவில் அந்த திட்டம் தொடங்கப்படும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் உங்களுடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு பேசினார்.
பிரசாரத்தில் மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் அனிதா ஆனந்தமகேஷ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திமுக மாவட்ட பொருளாளர் ராமநாதன், வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர்,

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, இந்திய கம்யூனிஸ்ட் கரும்பன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டிலைட்டா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மக்கள் நீதி மய்ய தொகுதி பொறுப்பாளர் அலெக்ஸ், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் குணசீலன், ஆதிதமிழர் பேரவை காயல் முருகேசன், மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சுரேஷ் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Tiruchendur ,Tamils ,Kanimozhi MP ,Union ,Union for Tamils ,
× RELATED திருச்செந்தூரில் திமுக வேட்பாளர்...