×

பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில் வீசி விட்டு தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார்

*மனைவி பிரிந்து போக காரணமாக இருந்ததால் தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம்

சேலம் : சேலத்தில் பெண் கொலை வழக்கில் தவறான தொடர்பில் இருந்த 3 டிரைவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில் ஹெல்மெட் அணிந்து தப்பி ஓடிய வாலிபர் போலீசாரின் பிடியில் சிக்கினார். சேலம் பெரமனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45). 4 ரோடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுகுணவள்ளி (40) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்றுமுன்தினம் முருகேசனுக்கு பிறந்தநாள் ஆகும். காதல் மனைவியிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டு காலை 10 மணிக்கு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்றார்.

அங்கிருந்த சக நண்பர்களுக்கு கேக் கொடுத்துக்கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் முருகேசனுக்கு தகவல் ஒன்றை தெரிவித்தார். சுகுணவள்ளியை பார்க்க சென்றபோது வளையல்கள் உடைந்து கிடக்கிறது, வீட்டில் ரத்தக்கறை இருக்கிறது, ஆனால் சுகுணவள்ளியை காணவில்லை என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடிவந்தார். பள்ளப்பட்டி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கீழ் மட்ட தண்ணீர் தொட்டியை பார்த்த போது, அங்கு சுகுணவள்ளி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது தலையில் வெட்டுக்காயம் இருந்தது.

உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து போன சுகுணவள்ளிக்கும் சிலருக்கும் தவறான தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக, புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டிவரும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர், அவரது நண்பர், தனியார் பள்ளி பஸ் டிரைவர் என 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது சுகுணவள்ளியை ரகசியமாக சந்தித்து சென்றுள்ளனர். போலீஸ் விசாரணையில் அவர்களுக்கு சுகுணவள்ளியுடன் தகாத உறவு இருந்த தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒருவர் தப்பி ஓடும் காட்சி இடம் பெற்றிருந்தது. அவர் ஓட்டி வந்த வண்டியை ஏதாவது ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு, ஹெல்மெட் அணிந்து வந்திருக்கலாம் என முடிவு செய்தனர். இதையடுத்து தொடர்ச்சியாக உள்ள கேமராவை போலீசார் ஆய்வு நடத்தினர். போலீசார் நினைத்தது போல ஒருவர் டூவீலில் ஏறிச் சென்றார்.

அவர் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி நேற்று மாலை அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவியும், சுகுணவள்ளியும் தோழிகளாக இருந்து வந்தனர். தற்போது எனது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதற்கு சுகுணவள்ளிதான் காரணம். இந்த கோபத்தில்தான் அவரை தீர்த்துக் கட்டினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

The post பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில் வீசி விட்டு தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...