×

கொரோனா தாக்குதலால் கணவரை இழந்தவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பெண்ணுக்கு வேலை

* முதல்வர் தலையீட்டால் உடனடி நடவடிக்கை

* பெண் சமூகமே முன்னேறும் என நெகிழ்ச்சி

மதுரை : கணவரை இழந்த பெண் மதுரையில் அரசு பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்தார். முதல்வரின் துரித நடவடிக்கையால் பெண் சமூகமே முன்னேறம் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.மதுரை, கே.புதூர் லூர்து நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காரைக்குடி மண்டலம் மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியாற்றினார். பணியில் இருந்தபோது கொரோனா தாக்குதலில் இறந்தார்.

இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் போதிய வருமானமின்றி சிரமப்பட்டுள்ளனர். வேலைக்கு போகும் நிலையில் இவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது கணவர், இறந்ததால் கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை கேட்டு, பாலாஜியின் மனைவி ரம்யா, போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

இவரது மனு அதிகாரிகளின் பரிசீலனையில் இருந்த போது தனது துயரமான நிலையை விளக்கி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். இவரது மனுவை கருணையுடன் பரிசீலிக்குமாறு, முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு பரிந்துரைத்துள்ளார். டிரைவர் பணியை தவிர்த்து எந்த பணியையும் செய்யத் தயாராக இருப்பதாக ரம்யா தெரிவித்துள்ளார். இதனால், அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. இதில், அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப கண்டக்டர் பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்படி நேர்முகத் தேர்வு முடிந்து, கடந்த 14ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில் ரம்யா உள்ளிட்ட 40 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.இதையடுத்து ரம்யா நேற்று மதுரை உலகனேரி கிளையில் கண்டக்டர் பணியை ஏற்றுக் கொண்டார்.

இவருக்கு மதுரை முதல் ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் கண்டக்டர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று முதல் 10 நாட்களுக்கு பயிற்சி கண்டக்டர் என்ற அடிப்படையில் ரம்யா, தனது பணியை துவக்கியுள்ளார். இவருக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார், பொதுமேலாளர் சிங்காரவேலன், தொமுச செயலாளர் கணேசன், தலைவர் ரவி, பொருளாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அரசு போக்குவரத்து கழக முதல் பெண் கண்டக்டர் ரம்யா கூறியதாவது, ‘‘கணவரை இழந்த நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது அறியாமல் நின்றேன். எனது கோரிக்கையை கடிதமாக முதல்வருக்கு அனுப்பினேன். முதல்வரோ, ஒரு குடும்பத் தலைவராக எனது கோரிக்கைக்கு செவி சாய்த்தார். உடனடி பலன் எனது கைக்கு கிடைத்தது. எனது கணவர் டிரைவராக பணியாற்றினார். அவர் பணியாற்றிய இடத்திலேயே எனக்கு கண்டக்டர் பணி கிடைத்துள்ளது. இதற்கு முதல்வர் தான் காரணம்.

ஆணுக்கு பெண் சமம் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். அவர் மூலம் எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களாலும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என்பதை நிறைவேற்றும் வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்து கழகத்தில் முதல் பெண் கண்டக்டர் என்பது எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.

எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகவே நான் பார்க்கிறேன். பெண்கள் எல்லாத்துறைகளிலும் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதைப்போல இனிமேல் பெண்களும் கண்டக்டர் லைசென்ஸ் எடுக்க முன்வரவேண்டும். முதல்வரின் நடவடிக்கையால் பெண் சமூகமே முன்னேறும். எந்த வேலையும் பெண்களால் முடியாதது அல்ல. பெண்களின் நலனில் எப்போதும் அக்கறை காட்டும் முதல்வருக்கு என் குடும்பத்தின் சார்பிலும், ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் சார்பிலும் நன்றி’’ என்றார்.

The post கொரோனா தாக்குதலால் கணவரை இழந்தவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பெண்ணுக்கு வேலை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Leshichi ,Madurai ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...