×

ஒடிசா, சிக்கிமை தொடர்ந்து பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி : அதிர்ச்சியில் கட்சி மேலிடம்!!

சண்டிகர் : ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒடிசாவில் முதல்வர் நவீன்பட்நாயக் தலைமையிலான பிஜூஜனதா தளம் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.147 சட்டப்பேரவை தொகுதிகள், 21 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பா.ஜ மற்றும் பிஜூஜனதாதளம் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதால் இருகட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன.

அதே போல், சிக்கிம் மாநிலத்திலும் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) உடனான கூட்டணியை பாஜ முறித்துள்ளது. சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் மக்களவை தேர்தலுடன் நடத்தப்படுகிறது. அங்கு 32 சட்டப்பேரவை தொகுதிகளும், ஒரு மக்களவை தொகுதியும் உள்ளன. ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியுடன், பா.ஜ கூட்டணி வைத்து ஆட்சி நடத்துகிறது. தற்போது அங்கு முதல்வராக பிரேம்சிங் தமாங் உள்ளார்.தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகள் இடையே மோதல் நடந்து வந்த நிலையில் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக பா.ஜ அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இக்கட்சியுடன், பஞ்சாபின் எதிர்க்கட்சியான காங்கிரஸும் இண்டியா கூட்டணியில் உள்ளது. எனினும் இவ்விரு கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபின் 13 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகின்றன.இதனிடையே பஞ்சாபின் முன்னாள் ஆளும் கட்சியான சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

பா.ஜ.க.வின் நிபந்தனைகளை சிரோன்மணி அகாலிதளம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி பேச்சு தோல்வியில் முடிந்துவிட்டதால் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று பா.ஜ.க. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மராட்டியத்திலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் கட்சிகளுடன் பாஜக நடத்தி வரும் பேச்சில் இழுபறி நீடிக்கிறது. பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தடுத்து தோல்வியில் முடிவதால் அக்கட்சி மேலிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

The post ஒடிசா, சிக்கிமை தொடர்ந்து பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி : அதிர்ச்சியில் கட்சி மேலிடம்!! appeared first on Dinakaran.

Tags : Odisha ,Sikkim ,Punjab ,J. K. Coalition ,Chandigarh ,J. K. ,Bijujanatha Dalam Party ,Chief Minister ,Naveenbatnayak ,Lok Sabha Election ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை