×
Saravana Stores

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது.. மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இன்றுடன் அந்த தேர்வுகள் முடிவடைகின்றன. அதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியது. தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதியுடன் முடியும். இந்த தேர்வை தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த 12,616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 பேர் ஆண்கள். 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 பேர் பெண்கள். மாற்றுப் பாலினத்தவர் 1. இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் பங்கேற்கின்றனர். 3,350 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடக்கிறது.

28ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 1ம் தேதி கணக்கு, 4ம் தேதி அறிவியல், 6ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 8ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15க்கு முடியும். தேர்வின்போது வழக்கமாக அனுமதிக்கப்படும் 15 நிமிடம் இந்த தேர்விலும் உண்டு. தேர்வு எழுத வரும் மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. முறைகேடுகளில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள், அதுதான் உங்களுக்கான வெற்றியைத் தேடித் தரும். எதை நினைத்தும் பதற்றம் அடையாதீர்கள், பயமும் கொள்ளாதீர்கள்,”என குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது.. மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Love Mahesh ,Chennai ,Puducherry ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...