×

பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்

குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் இருந்து கடந்த வாரம் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடந்த 19ம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாக குளச்சல் 5 விசைப்படகுகளில் இருந்த 73 மீனவர்களையும் மற்றும் ஒரு கேரள விசைப்படகையும், அதிலிருந்த 13 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். தகவலறிந்து தூத்துக்குடி சென்ற குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கத்தினர் மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், தூத்துக்குடி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 23ம் தேதி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட குளச்சல் மீனவரின் வீட்டிற்கு சென்று மீனவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து பேசினார்.

இதையடுத்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று பகல் குளச்சல் மீன் பிடித்துறைமுகம் வந்து சேர்ந்தனர். அவர்களை மீனவர்களின் குடும்பத்தினர் துறைமுகத்தில் வரவேற்றனர். பா.ஜ. மீனவர் பிரிவு நிர்வாகிகளும் துறைமுகம் சென்று மீனவர்களை வரவேற்க சென்றனர். அப்போது மீனவர்கள், ‘தூத்துக்குடியில் சிறை பிடிக்கப்பட்ட குளச்சல் மீனவர்கள் கனிமொழி எம்.பி., மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ ஆகியோரின் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர். பா.ஜ. அதில் உரிமை கொண்டாடி அரசியல் செய்யக்கூடாது’ என பா.ஜ மீனவ பிரிவு நிர்வாகிகளிடம் கூறி விரட்டியடித்தனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

The post பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள் appeared first on Dinakaran.

Tags : Pa ,Kulachal ,Kulachal Sea ,Kumari district ,Kerala ,Tuthukudi Sea ,Jaa ,Dinakaran ,
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...