×

11 வங்கி கணக்குகளை முடக்கியதோடு காங்கிரஸ் கட்சியையே முடக்க பாஜ அரசு முயற்சிக்கிறது: செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: காங்கிரஸ் கட்சியின் 11 வங்கி கணக்குகளை முடக்கி, காங்கிரஸ் கட்சியையே முடக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சிக்கிறது என்று செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு வேட்பு மனு படிவங்களை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சத்தியமூர்த்திபவனில் வழங்கினார். பின்னர் அவர் அளிதத பேட்டி: ஒன்றிய பாஜ அரசால் எங்களுடைய நிதி ஏறக்குறைய ரூ.285 கோடி திருடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காங்கிரசையும், ஜனநாயகத்துக்குட்பட்ட கட்சிகளையும் தொடர்ந்து ஒடுக்கி வருகிறார் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2017-18 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி தாமதமாக வருமான வரி விவரத்தை தாக்கல் செய்ததற்காகவும், இன்னொரு வழக்கு தாக்கல் செய்யவில்லை என்பதற்காகவும் காங்கிரஸ் கட்சியின் 11 வங்கி கணக்குகள் மோடி அரசால் முடக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜ அரசு காங்கிரஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ.115.32 லட்சத்தை எடுத்திருக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

என்ன காரணம் என்றால், ஜனநாயகத்தின் அடிப்படையில் இயங்குகின்ற, அரசியல் கட்சிகளை முடக்குவது குறிப்பாக காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என்றும், தலைவர்கள் மக்களை சந்திக்க கூடாது, போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்வது, நிதி ஆதாரத்தை முடக்கினால் அந்த அரசியல் இயக்கம் முடங்கி விடும், அப்படி காங்கிரஸ் கட்சியை முடக்கி விட பிரதமர் மோடி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். மகாத்மா காந்தியும், நேருவும் அகிம்சை வழியில் போராடி நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்று தந்தார்கள். இதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். பணம் ஒரு பொருட்டே கிடையாது. மக்களை நம்பி நாங்கள் இருக்கிறோம். மக்களுக்கான கட்சி காங்கிரஸ். இவ்வாறு அவர் கூறினார். மூத்த தலைவர் தங்கபாலு, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் செல்வம், எஸ்.ஏ.வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* முதல்வரிடம் காங். வேட்பாளர்கள் வாழ்த்து
அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையில் அதற்கான படிவங்களை சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து, செல்வப்பெருந்தகை தலைமையில் விஜய்வசந்த், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், விஷ்ணு பிரசாத் ஆகிய வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

The post 11 வங்கி கணக்குகளை முடக்கியதோடு காங்கிரஸ் கட்சியையே முடக்க பாஜ அரசு முயற்சிக்கிறது: செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress party ,CHENNAI ,Union BJP government ,Selvaperundagai ,Tamil Nadu ,Congress ,Vijay Vasanth ,Sasikanth Senthil ,Jyotimani ,Vishnu Prasad… ,BJP government ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...