×

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல்

 

செங்கல்பட்டு: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் டி.ஆர்.பாலு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் மற்றும் எம்எல்ஏகள் உடனிருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். அவர், நேற்று காலை செங்கல்பட்டு மணிகூண்டு அருகே உள்ள அண்ணா சிலைக்கும், புது பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் ராட்டிணகிணறு அருகேயுள்ள ராஜிவ்காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இவருடன் கூட்டணி கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். பின்னர், பேரணியாக சென்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அருண்ராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் தென்னவன், கனல்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மனு தாக்கல் செய்து முடிந்ததும் டி.ஆர்.பாலு, தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்நிலையில் தற்போது, டி.ஆர்.பாலு திமுகவின் பொருளாளராக இருந்து வருகிறார். தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஏற்கனவே, 3 முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக பதவி வகித்துள்ளார். தற்போது 4வது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த வேட்பு மனு தாக்கல் செய்தபோது காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், மறைமலை நகர் செயலாளர் ஜெ.சண்முகம், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்கேடி கார்த்திக், தாம்பரம் துணை மேயர் காமராஜ், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் முகமது யூனிஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட் செயலாளர் செல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : DR ,Balu ,Sriperumbudur ,Chengalpattu ,DMK ,TR Balu ,
× RELATED 17 வயதில் அரசியலில் நுழைந்து இன்று வரை...