×

குண்ணம் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் மூங்கில் அம்மன் ஏரி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: குண்ணம் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை கழிவுகளால் மூங்கில் அம்மன் ஏரி நீர் பாசிபடர்ந்து மாசடைந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து, ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில் மூங்கில் அம்மன் ஏரி உள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலம், அப்பகுதியில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. இந்த மூங்கில் அம்மன் ஏரியில், தனியார் கல்லூரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரி நீர்வரத்து கால்வாயில் கலக்கிறது. அதேபோன்று, தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ஆயில், கெமிக்கல் போன்ற கழிவுகளும் ஏரியில் நேரடியாக கலப்பதால் ஏரியின் நீர் சாம்பல் நிறத்தில் மாறி மாசடைந்து காணப்படுகிறது.

இவ்வாறு மாசடைந்த ஏரி நீரை கால்நடைகள் அருந்தினால் நோய்வாய்ப்படுவதோடு, விளை நிலங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஏரி நீரை மாசு ஏற்படுத்தும் தனியார் கல்லூரி, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஏரியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

The post குண்ணம் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் மூங்கில் அம்மன் ஏரி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Monggil Amman Lake ,Kunnam Panchayat ,Sriperumbudur ,Kanchipuram ,District ,Sriperumbudur Union ,Mungil Amman Lake ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...