×

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா: சீரமைக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் சிறுவர் பூங்கா பராமரிப்பில்லாமல் காணப்படுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டில் சீர்கெட்டு கிடக்கும் சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டில் உள்ள கே.கே.நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது. இங்கு, குறைந்த அளவிலேயே சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் பொருத்தப்பட்டன.

இந்த பூங்காவை ஒட்டியபடி சுடுகாடு உள்ளதால், இங்கு வரும் மர்ம ஆசாமிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பூங்கா திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே சீர்கெட்டுவிட்டது. தற்போது, மேற்படி பூங்காவில் முள்வேலி மற்றும் நடைபாதை இல்லை. சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் ஆங்காங்கே பிடுங்கி எறியப்பட்டுள்ளன. சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டாரில் கதவு மற்றும் பூட்டு இல்லை.

மேலும், ஆங்காங்கே மது பாட்டில்கள் சிதறி கிடப்பது மட்டுமில்லாமல் எந்நேரமும் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.  மேற்படி பூங்காவில் சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால் கோடை காலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாட வரும் சிறுவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர், சீர்கெட்டு கிடக்கும் பூங்காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

The post நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nandivaram ,Kuduvanchery Municipality ,Guduvancheri ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த...