×

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: பொதுமக்கள் பங்களிப்புடன் கோலப்போட்டி, மனிதசங்கிலி, உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூர்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்கள் பங்களிப்புடன் கோலப்போட்டி, மனித சங்கிலி, உறுதிமொழியேற்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படியும், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எஸ்.ஜெயகுமார் மேற்பார்வையில்;

திருமழிசை பேரூராட்சி சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் ம.வெங்கடேஷ் தலைமையில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அருள்மிகு ஜெகநாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில் அருகில் கடந்த 23ம் தேதி பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு செல்பி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

24ம் தேதி அருள்மிகு குளிர்ந்தநாயகி உடனுறை ஸ்ரீஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில் அருகில் 100 சதவிகித வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பணிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று 25ம் தேதி ஆல்பா கல்லூரியின் நாட்டு நலத்திட்டப் பணி இயக்கம் மாணவர்களின் சிறப்பு முகாமின் ஒரு பகுதி நடவடிக்கையாக 100 சதவிகித வாக்குப்பதிவு வலியுறுத்தி எனது வாக்கு, எனது உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரனி ஆல்பா கல்லூரியிலிருந்து தெற்குமாடவீதி, நாலத்தொன்னு தெரு வழியாக திருவள்ளுர் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையம் வந்தடைந்து, பின்னர் திருவள்ளூர் நெடுஞ்சாலையின் வழியே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வரை நடத்தப்பட்டது.

அப்போது செல்பி பாயிண்ட், கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப்போட்டிகள், நாடகம், சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் ம.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் அனைத்து மகளிர் சுய உதவிக்குழு சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, கோலம், பேரணி விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் கிராமத்தில் பேரணி மற்றும் உறுதிமொழி, கோலம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் வட்டார இயக்க மேலாளர் அபிராமி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராமதாஸ், வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாவட்ட வளப்பயிற்றுநர் ஜூலியட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராணி கோலப்போட்டியை பார்வையிட்டு மக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து பேசினார். பின்னர் உறுதிமொழி ஏற்று, மகளிர் குழுவினரின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு கொள்வோம், வாக்களிப்பது எனது எதிர்காலம், தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா,

ஓட்டுக்கு வாங்கமாட்டோம் நோட்டு, நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு போன்ற வாசகங்கள் எழுப்பி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் தாமரைக்குப்பம் கிராமத்தில் உள்ள முக்கிய விதிகளின் வழியாக 100 சதவீத வாக்குபதிவு கோரி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதேபோல் பெரியபாளையம் பகுதியிலும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் திலகவதி, வனிதா, உமாவதி, சுய உதவிக்குழு பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பூந்தமல்லி திருவேற்காடு நகராட்சி சார்பில் சிவன் கோயில் தெருவில், `என் வாக்கு என் உரிமை’ என்பதை வலியுறுத்தியும், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மனித சங்கிலி நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. திருவேற்காடு நகராட்சி பொறியாளர் சுரேந்திரன், சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் குருசாமி, பிரகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம், பொதுமக்களின் உரிமைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள், பொதுமக்களிடம் விளக்கி கூறினர். இதனையடுத்து, நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள், பரப்புரையாளர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், மகளிர் குழுவினர், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்திலும், ஆரணி பகுதியிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பேனரில் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. இதில் செயல் அலுவலர் சதீஷ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

* பிரமாண்ட பலூனை பறக்க விட்ட கலெக்டர்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சி சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பலூனை பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், வருவாய் அலுவலர் கருமாரியப்பன், நகர அமைப்பு ஆய்வாளர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் ஜனகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் பிரம்மாண்டமான பலூனை, எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்ற முழக்கமிட்டு பறக்க விட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், வட்டாட்சியர் வாசுதேவன், மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: பொதுமக்கள் பங்களிப்புடன் கோலப்போட்டி, மனிதசங்கிலி, உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Election Commission of India ,Thiruvallur District Election ,Officer ,District Collector ,Dr. ,Prabhu Shankar ,
× RELATED வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும்...