×

பிரதமர் பதவியில் இருந்து கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறுகிறாரா?: எதிர்கட்சிகளின் தொடர் குற்றசாட்டுக்கு ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பிரதமர் பதவியில் இருந்து கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் குற்றசாட்டுக்கு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை பிரதமர் மோடியே மீறுகிறார்; அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை’ போன்ற புகார்களை எதிர்க்கட்சி தலைவர்கள் முன்வைக்கின்றனர். மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்கின்றனர். பல புகார்களில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது. சில விஷயங்களில் மட்டும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ‘நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தும் நோக்கத்திற்காக நடத்தை விதிகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் பிரதமருக்கு தேர்தல் நடத்தை விதிகளில் சில விஷயங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் பல விதிகள் மாநில முதல்வர்களுக்கோ அல்லது ஒன்றிய, மாநில அமைச்சர்களுக்கோ பொருந்தாது. இதனால், விதிகளின்படி பிரதமருக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தேர்தல் பிரசாரத்தின் போது விமானப்படை விமானங்களை பிரதமர் எந்த வகையிலும் பயன்படுத்த முடியாது. அதேபோல் மாநில முதல்வர் உட்பட ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால், இந்த விசயத்தில் பிரதமருக்கு சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர், முதல்வர், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் ேதர்தல் பிரசாரத்தின் போது ஒரு அரசுப் பணியாளரை உடன் அழைத்து செல்ல முடியும். ஆனால் அந்த பணியாளர், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. பல தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது பாதுகாப்பு காரணங்களுக்காக குண்டு துளைக்காத வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

அந்த வாகனங்கள் அனைத்தையும் அவர்களால் பயன்படுத்த முடியும். ஆனால் அதற்கான செலவை அரசு ஏற்காது. சம்பந்தப்பட்ட நபர் அல்லது அவரது அரசியல் கட்சிகள் செலவுகளை ஏற்க வேண்டும். பிரதமரைப் பொறுத்தவரை, அவர் சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் கீழ் உள்ளதால், சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிரதமர் வருகை தந்தால் சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகம் ஹெலிபேட் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அதன் செலவுகளை ஏற்க வேண்டும். பிரதமரின் உரையின் போது தூர்தர்ஷன் ஊழியர்கள் பங்கேற்கலாம்’ என்று பல விதிகள் கூறப்படுகின்றன.

சமீபத்தில் பிரதமர் மோடியின் ‘விக்சித் பாரத்’ செய்தியை மொபைல் போன்களில் அனுப்பியதாக ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. உடனடியாக அந்த செய்தியை அனுப்புவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேபோல் 2017ம் ஆண்டு உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன்பு, மாநில அரசின் இணையதளத்தில் மோடியின் புகைப்படத்துடன் கூடிய பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா விளம்பரங்கள் இருந்தன. பின்னர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு காரணமாக அந்த விளம்பரம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post பிரதமர் பதவியில் இருந்து கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறுகிறாரா?: எதிர்கட்சிகளின் தொடர் குற்றசாட்டுக்கு ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Modi ,PM ,New Delhi ,PM Modi ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...