- வள்ளி திருகல்யாணம்
- திருச்செந்தூர் கோயில்
- MOI
- திருச்செந்தூர்
- முருகன்-வள்ளி திருக்கல்யாண வைபவம்
- பங்கூனி உத்ரா விழா
- திருச்செந்தூர் முருகன் கோயில்
- பங்குனி உத்திரவிழா
- தமிழ் இறைவன் முருகன்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று இரவு நடைபெற்ற முருகன்-வள்ளி திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனர். தமிழ் கடவுள் முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக பங்குனி உத்திரவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது மிகவும் சிறப்பாகும்.
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து வள்ளியம்மன் தபசுக்கு புறப்பட்டார். மாலை சாயரட்சை தீபாராதனையாகி, கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதித்தெரு வழியாக சிவன் கோயிலுக்கு வந்தார்.
தொடர்ந்து பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து சுவாமி, அம்மனை 3 முறை வலம் வந்து, சுவாமிக்கும், வள்ளி அம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வந்து கோயிலை சேர்ந்தனர். இரவு கோயிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் வைதீக முறைப்படி நடந்தது. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் தங்கள் பெயரில் மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
The post திருச்செந்தூர் கோயிலில் வள்ளி திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் மொய் எழுதி வழிபாடு appeared first on Dinakaran.